Published : 06 May 2024 06:43 PM
Last Updated : 06 May 2024 06:43 PM

குமரி அருகே கடல் அலையில் சிக்கி மருத்துவ மாணவர்கள் 5 பேர் உயிரிழப்பு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்

சென்னை: “கன்னியாகுமரி அருகே லெமூர் கடற்கரையில் கடல் அலையில் சிக்கி திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் 5 பேர் உயிரிழந்த செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், ராஜாக்கமங்கலம் கிராமம், லெமூர் கடற்கரையில், இன்று காலை சுமார் 10 மணியளவில் திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் கால் நனைப்பதற்காக கடலில் இறங்கியபோது, கடல் அலை அதிகமாக இருந்ததால் எதிர்பாராதவிதமாக கடல் அலை இழுத்துச் சென்றது.

இதில், நெய்வேலியைச் சேர்ந்த காயத்திரி (25) கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சர்வதர்ஷித் (23) திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவின்சாம் (23), தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாருகவி (23) மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (24) ஆகிய 5 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மருத்துவக் கல்வி பயின்று உயிர்காக்கும் மருத்துவராகி மருத்துவச் சேவையில் ஈடுபடவிருந்த இம்மாணவர்களின் உயிரிழப்பு உண்மையிலேயே மருத்துவ உலகுக்கும், தமிழகத்துக்கும் பேரிழப்பாகும். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன்.

இந்தத் துயரகரமான சம்பவத்தில் தம் பிள்ளைகளை இழந்து வாடும் பெற்றோர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்” என்று அதில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x