Published : 03 May 2024 04:06 AM
Last Updated : 03 May 2024 04:06 AM

கிருஷ்ணகிரியில் மழையின்றி பாதிக்கப்பட்ட மாமரங்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

பர்கூர் வட்டாரத்துக்கு உட்பட்ட மகாதேவகொல்லஹள்ளி பகுதியில் உள்ள தோட்டத்தில் மகசூல் மற்றும் மா மரங்கள் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட தோட்டக்கலைத் துறை அலுவலர்கள்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழையின்றி பாதிக்கப்பட்ட காய்ந்த மாமரங்கள் குறித்த கணக்கெடுக்கும் பணியை தோட்டக்கலைத் துறையினர் நேற்று தொடங்கினர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 35 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் முலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக் கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்நிலையில், நிகழாண்டில் மழையின்றி மா மகசூல் பாதிக்கப்பட்டும், கடும் வெயில் வாட்டும் நிலையில் மாமரங்கள் காய்ந்தும் வருகின்றன. மா மரங்களைக் காக்க விவசாயிகள் தண்ணீரை விலைக்கு வாங்கிப் பராமரித்து வருகின்றனர்.

இதனால், மா விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, மகசூல் பாதிப்பு மற்றும் காய்ந்த மா மரங்களைக் கணக்கெடுத்து, அதன் அறிக்கையை அனுப்பி வைக்க தோட்டக்கலைத் துறை அலுவலர்களுக்கு, ஆட்சியர் கே.எம்.சரயு உத்தரவிட்டார்.

அதன்படி பர்கூர் வட்டாரத்துக்கு உட்பட்ட போச்சம்பள்ளி, மகாதேவ கொல்லஹள்ளி, காட்டாகரம், சந்தூர், வெப்பாலம்பட்டி, சிகரலப்பள்ளி, புலிகுண்டா, பிஆர்ஜி மாதேப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. இப்பணியில் கேவிகே சிறப்பு விஞ்ஞானி ரமேஷ்பாபு தலைமையில் வட்டார புள்ளியியல் ஆய்வாளர் சாந்தி, தோட்டக்கலைத் துறை அனுசுயா உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக அலுவலர்கள் கூறும்போது, “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி வட்டாரங்களில் மகசூல் பாதிப்பு, காய்ந்த மாமரங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அறிக்கை தயார் செய்து ஆட்சியரிடம் அளிக்கப்படும்”, என்றனர்.

பேரிடரை சந்திக்கும் நிலை: இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளின் கூட்டமைப்பு தலைவர் சவுந்தர ராஜன் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெப்பக் காற்றால் மா மரங்கள் கருகி வருகின்றன. ஏற்கெனவே மகசூல் பாதிக்கப்பட்ட நிலையில், மா மரங்களும் பாதிக்கப்படுவதால், மிகப் பெரிய பேரிடரை மா விவசாயிகள் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்படும் மரங்களைக் காக்க தோட்டக்கலைத் துறை சார்பில் தண்ணீர் வழங்க வேண்டும். மேலும், மா ஆதார விலையாகக் கிலோவுக்கு ரூ.50 பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்ட மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x