

ஓசூர்: ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் ரூ.26 கோடி மதிப்பில் நடைபெற்ற மதகுகள் சீரமைப்பு பணி நிறைவடைந்தது. இதையடுத்து, பாசனத்துக்குத் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஓசூர் கெலவரப்பள்ளியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை மூலம் 8 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் வசதி பெற்று வருகிறது. இந்நிலையில், அணையில் உள்ள 7 மதகுகளின் ஷட்டர்கள் மற்றும் மணல் போக்கி ஷட்டர்களை புதிதாக மாற்ற நீர்வளத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நீர் இருப்பு குறைப்பு: இதையடுத்து, அணை பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.26 கோடி மதிப்பில் மதகுகள் சீரமைப்பு பணி கடந்தாண்டு ஜூன் 24-ம் தேதி தொடங்கியது. இப்பணிக்காக அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில், 24 அடியாக நீர் இருப்பு குறைக்கப்பட்டது. மேலும், அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதும் தொடர்ந்து ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், அணை மதகுகளில் புதிய ஷட்டர்கள் பொருத்தும் பணி நிறைவடைந்தது.
இதையடுத்து, கடந்த 15-ம் தேதி முதல் அணையில் தண்ணீர் சேமிக்கப்பட்டு வருகிறது. அணைக்கு நேற்று விநாடிக்கு 119 கனஅடி நீர் வரத்து இருந்தது. அணையிலிருந்து 100 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் 26.24 அடியாக உள்ளது. இதனிடையே, அணையிலிருந்து 2-ம் போக பாசனத்துக்குத் தண்ணீர் திறக்க வேண்டும் எனப் பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேளாண் பணி பாதிப்பு: இது தொடர்பாக பாசன விவசாயிகள் கூறியதாவது: கெலவரப்பள்ளி அணை மதகு ஷட்டர் பொருத்தும் பணிக்காக அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால், கடந்தாண்டு ஜூலையில் முதல் போக பாசனத்துக்குக் கால்வாயில் தண்ணீர் திறக்கவில்லை. மேலும் பணிகள் நடைபெற்ற நிலையில், நடப்பாண்டு பிப்ரவரியில் இரண்டாம் போக பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கவில்லை. இதனால், அணைப் பாசன பகுதியில் வேளாண் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போது, ஷட்டர் பொருத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் போக பாசனத்துக்குத் தண்ணீர் திறக்க வேண்டும். மேலும், அணைக்கு மழை நீரை விட தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவு நீர் அதிகளவில் வருகிறது. இந்த தண்ணீரைப் பயன்படுத்தும்போது, விளை நிலங்கள் மாசடைந்து, பயிர்களுக்கு நோய் தாக்கம் ஏற்படுகிறது. எனவே, தென் பெண்ணை ஆற்றில் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.