Published : 24 Apr 2024 02:44 PM
Last Updated : 24 Apr 2024 02:44 PM

சென்னையில் திரவ நைட்ரஜன் உணவுப்பொருள் விற்பனை குறித்து ஆய்வு - உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: கர்நாடகாவில் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்டு சிறுவனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, சென்னையில் ஸ்மோக் பிஸ்கட் உள்ளிட்ட திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் விற்கப்படுகிறதா என்று ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவின் தாவணக்கரை பகுதியில் அண்மையில் சிறுவன் ஒருவன் திரவ நைட்ரஜன் கலந்த ஸ்மோக் பிஸ்கட்டை சாப்பிட்டதும் மூச்சு விடமுடியாமல் வலியால் துடித்தான். உடனடியாக சிறுவனை அவனது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று காப்பாற்றினர். எனினும், சிறுவன் வலியால் அலறும் வீடியோ காட்சிகள் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தின.

இந்த நிலையில், சென்னையில் ஸ்மோக் பிஸ்கட் உள்ளிட்ட திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் விற்கப்படுகிறதா என்று ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பேசியுள்ள உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், "சென்னையில் பார்கள், பார்ட்டி ஹால்களில் திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் விற்கப்படுவது தெரியவந்துள்ளது. திரவ நைட்ரஜன் உணவே அல்ல. அவை உணவுகளை பதப்படுத்தப்பட்ட மட்டுமே பயன்படுத்த வேண்டும். டிரை ஐஸாக மீன், பால் போன்ற உணவுப்பொருட்களை பதப்படுத்தவே திரவ நைட்ரஜன் பயன்படுகிறது. அவற்றை உணவாக பயன்படுத்தினால் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறோம். சென்னையில் இந்த மாதிரியான உணவுப்பொருள்களை விற்கும் கடைகள் குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இப்போதைக்கு சென்னையில் திரவ நைட்ரஜன் உணவுப் பொருட்கள் விற்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்கு பின் தடை விதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x