

தமிழகத்திற்கு தேவையான உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பே இல்லை என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்திற்கு தேவையான 50 சதவீதம் அரிசி கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலிருந்து வருகிறது. பாசிப்பருப்பு, துவரம் பருப்பு, கடலை பருப்பு, பட்டாணி, மக்காச்சோளம், கோதுமை, உளுந்து, சீரகம், கடுகு, வெந்தயம் உள்ளிட்ட பல்வேறு வகை உணவு பொருட்களும், வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் வருகின்றன.
கரோனா ஊரடங்கால் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சத்தால் நடுத்தர மற்றும் உயர் வகுப்பு மக்கள், 2 முதல் 3 மாதங்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை வாங்கி குவித்துள்ளனர்.
ஒரே நேரத்தில் ஒரிரு மாதங்களுக்கான உணவுப்பொருட்களை மக்கள் கொள்முதல் செய்ததால் சூப்பர் மார்க்கெட், மளிகை கடைகளில் உணவுப்பொருட்கள் விற்று தீர்ந்தன. உணவுப்பொருட்களும் இருப்பு இல்லை என்று வியாபாரிகள் கூடுதல் விலைக்கு விற்க ஆரம்பித்தனர்.
அதனால், அன்றாடம் பருப்பு, சீனி, அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப்பொருட்களை வாங்கி சமைத்து சாப்பிடும் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
கடந்த ஒரு வாரமாக மீண்டும் சூப்பர் மார்க்கெட், மளிகைக் கடைகளில் ஒரளவு உணவுப்பொருட்கள் வர ஆரம்பித்து இருந்தாலும் எந்த நேரத்திலும் உணவுப்பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படலாம் என்ற அச்சம் மக்களிடம் நிலவுகிறது.
இதுகுறித்து மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சோமசுந்தரம் கூறியதாவது: இந்தியாவின் ஆண்டு தேவையே 5 கோடி முதல் 6 கோடி டன் வரையிலான உணவு தானியங்கள் மட்டுமே.
தற்போது நாட்டில் கைவசம் உள்ள கிடங்குகளில் 10 கோடி டன் வரை உணவு தானியங்கள் இருப்பு உள்ளன. கோதுமை, அரிசி குறித்து பொதுமக்கள் கவலைப்பட தேவையில்லை. ஆஸ்திரேலியாவில் இருந்து கப்பலில் பருப்பு வகைகள் வந்து கொண்டிருக்கின்றன.
ஏழை, எளிய மக்கள் மொச்சை அதிகளவு வாங்கிசாப்பிடுகின்றனர். மிளகா, மஞ்சள், மல்லி, சீரகம், வெந்தயம் போன்றவை இன்னும் 5 ஆண்டிற்கு போதுமான அளவு இருப்பு உள்ளது.
மல்லி இந்தியாவில் விளைச்சல் அதிகமாக உள்ளது. பூண்டு போதுமான அளவு வந்து கொண்டிருக்கிறது. மதுரையில் மட்டுமே தற்போது கீழ மாசி வீதியில் உள்ள கொள்முதல் கடைகளில் 235 டன் உணவுப்பொருட்கள் இருப்பு உள்ளது. இதற்கு மேலேயும் உணவுப்பொருட்கள் மில்கள், குடோன்களிலும் உள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.