

‘காஸ் சிலிண்டருக்கான மானியத்தை விட்டுக் கொடுங்கள்’ என்று கேட்டு இண்டேன் சமையல் காஸ் வாடிக்கையாளர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் குறுந்தகவல் அனுப் பிவருகிறது. இதற்கு பொதுமக்கள் உட்பட பல தரப்பினரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இண்டேன் சமையல் காஸ் வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல் ஒன்றை இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐஓசி) தற்போது அனுப்பி வருகிறது. ‘‘சிலிண்டருக்கான மானியம் உண்மையிலேயே தேவையுள்ளோருக்கு மட்டுமே கிடைக்க வேண்டும். எனவே, உங்களது மானியத்தை விட்டுக்கொடுங்கள். நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றுங்கள்’’ என்று அதில் கூறப்பட்டிருக்கிறது.
மானியம் அல்லாத சிலிண்டர் தற்போது ரூ.922-க்கும் மானியத்துடன் கூடிய சிலிண்டர் ரூ.401-க்கும் விற்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சென்னை இந்திரா நகர் பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் கூறும்போது, ‘‘2 நாட்களுக்கு முன்பு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து எனக்கு இந்த குறுந்தகவல் வந்தது. தேவையானவர்களுக்கு மானியம் கொடுப்பதால், மற்றவர்கள் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. நாங்கள் எல்லாம் கோடீஸ்வரர்கள் என்று நினைத்துக்கொள்கிறார்களா?’’ என்றார்.
இதுகுறித்து தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் அமைப்பின் தலைவர் சடகோபன் கூறும் போது, ‘‘தற்போதைய விலைவாசி உயர்வால் நடுத்தர மக்கள் ஏற்கெனவே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வாங்கும் சம்பளம் அத்தியாவசிய தேவைகளுக்கே சரியாக இருக்கிறது. இந்த நிலையில், இதுபோன்ற குறுந்தகவல், நுகர்வோர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்துகிறது’’ என்றார்.
இதுதொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, ‘‘சிலிண்டருக்கான முழு அடக்கவிலையை பொதுமக்கள் மீது சுமத்தக்கூடாது என்பதாலேயே மானிய விலையில் சிலிண்டர் வழங்கப்படுகிறது. ‘அந்த மானியம் எங்களுக்கு தேவையில்லை’ என்று கருதுபவர்களுக்காக மட்டுமே இந்த குறுந்தகவல் அனுப்பப்படுகிறது. மானியத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல’’ என்றனர்.