ஈஷா மையத்தில் காணாமல் போன 6 பணியாளர்களில் 5 பேர் திரும்பிவிட்டதாக காவல் துறை தகவல் @ ஐகோர்ட்

ஈஷா மையத்தில் காணாமல் போன 6 பணியாளர்களில் 5 பேர் திரும்பிவிட்டதாக காவல் துறை தகவல் @ ஐகோர்ட்
Updated on
1 min read

சென்னை: ஈஷா யோகா மையத்தில் பணியாற்றியவர்களில் இதுவரை காணாமல் போன 6 பேரில் 5 பேர் திரும்பிவிட்டனர். மேலும், இதுவரை 36 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், தென்காசி மாவட்டம் குலசேகரபட்டியை சேர்ந்த விவசாயி திருமலை, காணாமல் போன தன்னுடைய சகோதரரை மீட்டு தரக் கோரி ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “என் சகோதரர் கணேசன் என்ற சுவாமி பவதத்தா என்பவர் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் தன்னார்வலராக பணியாற்றி வந்ததார். இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் 2ம் தேதி, ஈஷா யோகா மையத்தில் இருந்து என்னை தொலைப்பேசியில் அழைத்து, கணேசன் சொந்த ஊருக்கு வந்துள்ளாரா? என கேட்டனர். மேலும், 3 நாட்களாக ஈஷா யோகா மைத்துக்கும் அவர் வரவில்லை என்ற தகவலையும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் 5-ம் தேதி ஈஷா யோகா மைய பொறுப்பாளர் தினேஷ் ராஜா, கோவை மாவட்டம் ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார்.இந்த புகார் மீது வழக்குப் பதிவு செய்த ஆலாந்துறை காவல்துறை ஓராண்டு காலமாகியும் அந்த வழக்கில் மந்தமான விசாரணை நடத்துகிறது. எனவே, காவல் துறை விசாரணையை துரிதப்படுத்தி, காணாமல் போன என் சகோதரர் கணேசனை மீட்டு, நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், காணாமல் போனவர்கள் பற்றிய வழக்கை துரிதப்படுத்தி விசாரிக்க வேண்டும். இது தொடர்பாக உரிய பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி, “இதுவரை 36 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. ஈஷா யோகா மைய ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணைக்கு கால அவகாசம் வேண்டும்.

ஏற்கெனவே காணாமல் போன 6 பேர் தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியே சென்றுள்ளனர். தற்போது அவர்களில் 5 பேர் திரும்ப வந்துவிட்டனர். ஆனால், மனுதாரரின் சகோதரரை இன்னும் காணவில்லை” என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in