

ராஜபாளையம்: தென்காசி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கிருஷ்ணசாமி மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளர் ஜான்பாண்டியன் ஆகியோருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த அவரது பிள்ளைகள், தந்தைகளுக்கு வெற்றியை தேடி தருவார்களா என்ற எதிர்பார்ப்பு இழந்துள்ளது.
தென்காசி மக்களவைத் தொகுதியில் புதிதமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 1998 முதல் 6 முறை போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இதனால் இம்முறை அவரது மகனும், புதிய தமிழகம் கட்சி இளைஞர் அணி தலைவருமான டாக்டர் ஷியாம் போட்டியிடுவார் என பேசப்பட்டது. இதனால், தென்காசி தொகுதியில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் ஷியாம் கலந்து கொண்டார். இறுதியில் 7வது முறையாக தென்காசி தொகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமி களம் இறங்கியுள்ளார்.
இம்முறை எப்படியும் வெற்றி பெற வேண்டும் என கிருஷ்ணசாமியும், தந்தையை வெற்றி பெற வைத்து விட வேண்டும் என அவரது மகன் ஷியாமும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டபோது, அக்கட்சியின் மகளிரணி தலைவியான ஜான்பாண்டியனின் மகள் டாக்டர் வினோலின் நிவேதா போட்டியிடுவார் என கூறப்பட்டது.
ஆனால், தென்காசி தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் ஜான்பாண்டியன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தனது தந்தையை வெற்றி பெற வைப்பதற்காக வினோலின் நிவேதா தனது கணவருடன் கிராமங்கள் தோறும் சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
தென்காசி தொகுதியில் போட்டியிடுவர் என எதிர்பார்க்கப்பட்ட பிள்ளைகள், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் தங்களது தந்தைகளுக்கு வெற்றியை தேடி தருவார்களா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.