Last Updated : 16 Apr, 2024 03:51 PM

7  

Published : 16 Apr 2024 03:51 PM
Last Updated : 16 Apr 2024 03:51 PM

“திமுகவினர் 13 பேருக்கு ஜூன் 4-க்குப் பிறகு ஜெயில் அல்லது பெயில்” - பாஜக தலைவர் நட்டா @ பரமக்குடி

பரமக்குடி: “திமுகவினர் பகல் கொள்ளை அடிக்கின்றனர்” என என ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து நடந்த பிரச்சாரத்தில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா சாடினார். மேலும், “திமுகவினர் 13 பேருக்கு ஜூன் 4-க்குப் பிறகு ஜெயில் அல்லது பெயில்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ராமநாதபுரம் மக்களவை தொகுதி பாஜக கூட்டணியின் சுயேச்சை வேட்பாளர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் இருந்து பேருந்து நிலையம், வெள்ளி விழா ஆர்ச், காந்திசிலை வரை 'ரோடு ஷோ'வில் பங்கேற்றார். இதில் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம், எம்பிக்கள் தர்மர், ஓ.பி.ரவீந்திரநாத், பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் முரளிதரன், மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.பி.எஸ். நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

'ரோடு ஷோ' நிறைவடைந்த காந்தி சிலை பகுதியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியது, ''இங்குள்ள மக்கள் உற்சாகத்தை பார்க்கும்போது, ஓ.பன்னீர்செல்வத்தை எம்.பி.யாக டெல்லிக்கு அனுப்ப தயாராகிவிட்டீர்கள் என்பது தெரிகிறது. மூத்த, அனுபமிக்க, திறமை வாய்ந்த தலைவர் ஓ.பன்னீர்செல்வம். இங்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

வரும் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் மட்டும் அல்ல; இந்தத் தேர்தலில் 400 இடங்களைப் பிடித்து, 2047-ல் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான தேர்தல். ஓ.பன்னீர்செல்வம் மக்களுக்காக குரல் கொடுப்பவர். அவர் எம்.பியாகி டெல்லிக்கு வர வேண்டும்.

பிரதமர் மோடி ஆட்சியில் கிராமங்கள் வளர்ச்சியடைந்துள்ளன. பெண்கள் முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கிறார்கள். ஏழைகளுக்கு வீடு, மருத்துவ வசதி கிடைத்துள்ளது. மேலும், 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதன்மூலம் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். தமிழகத்துக்கு சிறப்பு கவனம் செலுத்தி ரூ.48 ஆயிரம் கோடியில் சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் மொழியை சர்வதேச அளவுக்கு மோடி கொண்டு சென்று கொண்டிருக்கிறார்.

நாட்டில் டிஜிட்டல் மயம், சாலை வசதி, விமான நிலையங்கள் விரிவாக்கம் மத்திய அரசால் செய்யப்பட்டுள்ளது. திமுகவில் டி-என்றால் (டைனாசிட்டி) வாரிசு அரசியல், எம் என்றால் - (மணி லேண்டிங்) பணத்தை சுரண்டுவது, கே என்றால் - கட்டப்பஞ்சாயத்து.

திமுகவினர் பகல் கொள்ளை அடிக்கின்றனர். திமுகவைச் சேர்ந்த 13 பேருக்கு ரூ.1 லட்சம் கோடி சொத்து உள்ளது. இவர்களை ஜூன் 4 அன்று அமைய உள்ள அரசு, ஜெயிலில் வைத்திருக்கும் அல்லது பெயிலில் வைத்திருக்கும்” என்று நட்டா பேசினார்.

நிகழ்வுத் துளிகள்: காந்தி சிலை அருகே பிரச்சாரத்தில் பேசும் முன் ஜே.பி.நட்டா வெற்றிச் சின்னம் என 3 முறை தமிழில் கூறினார். | பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பரமக்குடி யாதவ மெட்ரிக் பள்ளிக்கு காலை 10.35 மணிக்கு வந்திறங்கினார். அங்கு வேட்பாளர் ஓபிஎஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர். | பிரச்சார வாகனத்தில் காலை 11 மணிக்கு பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியிலிருந்து 'ரோடு ஷோ' வை தொடங்கி 11.30 மணிக்கு காந்தி சிலை பகுதிக்கு வந்தடைந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x