

ஈரோடு: வாக்கு செலுத்த பணம் வாங்கக் கூடாது என்ற சிந்தனையை வாக்காளர்களின் மனதில் பதிவு செய்து, அவர்களை நேர்மையின் பக்கம் நிற்கச் செய்யும் முயற்சியில் ஈரோட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோட்டில் இயங்கி வரும் யான் அறக்கட்டளை, கல்லூரி மாணவர் களிடம் காந்தியக் கொள்கைகளைக் கொண்டு செல்லும் பணியைச் செய்துவருகிறது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில், ‘வாக்குகளை விலைக்கு விற்பதும், விலைக்கு வாங்குவதும் சமூக குற்றம்’ என்ற விழிப்புணர்வை வாக்காளர்களிடம் கொண்டு செல்ல, இந்த அறக்கட்டளையின் விழுதுகளாக உள்ள மாணவர்கள் விரும்பியுள்ளனர். இதையடுத்து, திருப்பூர் மக்களவைத் தொகுதியின் அந்தியூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பெருந்தலையூரை தேர்வு செய்து, அங்குள்ள வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து, யான் அறக்கட்டளை ஒருங்கிணைப் பாளர் கிருஷ்ணன் கூறியதாவது: பெருந்தலையூர் ஊராட்சியில் பெருந்தலையூர், செரையாம் பாளையம், குட்டிபாளையம் ஆகிய 3 கிராமங்களும் 3,000 வாக்காளர் களும் உள்ளனர். இங்கு, ‘எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல, நமது வேட்பாளரை அறிவோம்’ ஆகிய கொள்கைகளை முன்வைத்து அறக் கட்டளை மாணவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர்.
சாலைகளில் விழிப்புணர்வு வாசகங்களை எழுதியும், பதாகைகள் வைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தவிர ஒவ்வொரு வாக்காளரிடமும் ‘என் வாக்கு விற்பனைக்கு அல்ல’ என உறுதிமொழிப் பத்திரத்தில் கையொப்பம் பெறும் முயற்சியில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். கிராம மக்களை ஒருங்கிணைத்து மவுன ஊர்வலமும் நடத்தியுள்ளனர், என்றார்.
இதனிடையே, பெருந்தலையூர் கிராமத்துக்கு நுழையும் இடத்தில் இரும்பி கம்பிகளால் ‘நேர்மையான தேர்தலை நோக்கி’ என்ற அலங்கார வளைவையும் மாணவர்கள் வைத்துள்ளனர். இத்துடன், பிரதான கட்சிகளின் வேட்பாளர்களை சந்தித்த இக்குழுவினர், ‘பெருந்தலையூரில் லஞ்சம் கொடுத்து வாக்குகளை பெறும் பணியைச் செய்ய வேண்டாம்’ என்ற கோரிக்கை கடிதமும் கொடுத்துள்ளனர்.
இத்தகைய விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுள்ள யான் அறக்கட்டளை மாணவர்கள் குழுவைச் சேர்ந்த அனுஸ்ரீ, சிபி ஆகியோர் கூறுகையில், ‘எங்களின் விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுக்கும் போது ஆரம்பத்தில் சவாலாக இருந்தது. தற்போது கிராம மக்கள் எங்களை மதிக்கத் தொடங்கியுள்ளனர். நாட்டுக்கே முன்மாதிரியாக பெருந்தலையூர் ஊராட்சி வாக்காளர்களை மாற்றும் எங்கள் முயற்சியில் வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறோம்’ என்றனர்.