

சென்னை: மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தில், சோழிங்கநல்லூரில் இருந்து சிறுசேரி வரை தடைபட்டிருந்த மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை இரண்டு வாரங்களில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை 45.4 கி.மீ.தொலைவை கொண்ட 3-வது வழித்தடம் ஆகும்.
இந்த வழித்தடத்தில் மாதவரம் பால்பண்ணை, பசுமை வழிச்சாலை, சேத்துப்பட்டு உள்ளிட்ட இடங்களில் சுரங்கப்பாதை பணிகள்தொடங்கி தீவிரமாக நடைபெறுகின்றன. இதற்காக, சுரங்கம் துளையிடும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதுபோல், பல இடங்களில் மெட்ரோ ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
இதனிடையே, ஓஎம்ஆர் சாலையில் நேருநகர் முதல் சிறுசேரி சிப்காட் வரை உயர்மட்ட பாதை அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு மத்தியில் தொடங்கின.
இவற்றில், சோழிங்கநல்லூர் - சிறுசேரி வரை 10 கி.மீ. தொலைவுக்கு உயர்மட்ட பாதைக்காக பூர்வாங்க பணிகள் நிறைவடைந்து, அடுத்தகட்ட பணிக்காக, சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டு வந்தன. தொடக்கத்தில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டு ஓஎம்ஆர்-ல் பல்வேறு பிரிவுகளுக்கு பணிகள் வழங்கப்பட்டபோது, மெட்ரோ ரயில் பயணிகள், உற்சாகமடைந்தனர்.
ஒப்பந்தம் ரத்து: சோழிங்கநல்லூரில் இருந்து சிறுசேரி சிப்காட் வரையிலான 10கி.மீ தொலைவுக்கு 9 ரயில் மெட்ரோநிலையங்களை அமைக்க ஒப்பந்தத்தை ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்துக்கு (RVNL) மெட்ரோ ரயில்நிறுவனம் கடந்த ஆண்டு ஏப்ரலில் வழங்கியது. இந்த நிறுவனம், கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள துணை ஒப்பந்ததாரரை நியமித்தது. அவர்கள்பணியை செய்யாததால், திட்டப்பணியில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, துணை ஒப்பந்ததாரரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
1,000 தூண்கள்: இந்நிலையில், இந்த வழித்தடத்தில் பணிகள் சில வாரங்களில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று சென்னை மெட்ரோ ரயில்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: புதிய ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இரண்டு வாரங்களில் பணிகளை மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
விரைவில் பணிகள் முழு வீச்சில் நடைபெறும். சோழிங்கநல்லூர் மற்றும் சிறுசேரி சிப்காட் இடையே இதுவரை 440 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் மாதங்களில் 1,000 தூண்களுக்கு மேல் அதிகரிக்கப்படும். பெரும்பாலான சிக்கல்கள் தீர்க்கப்பட்டுவிட்டதால், இழந்த நேரத்தை ஈடு செய்ய முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.