

புதுடெல்லி: “உலகம் முழுவதும் திருவள்ளுவர் பண்பாட்டு மையங்கள் நிறுவப்படும்" என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வரும் மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்.14) வெளியிட்டார். ‘மோடியின் உத்தரவாதம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கை 'சங்கல்ப் பத்ரா' என்று அழைக்கப்படுகிறது. இந்த தேர்தல் அறிக்கையில் திருவள்ளூரை பிரதானப்படுத்தியுள்ளது பாஜக.
தேர்தல் அறிக்கையில், உலகம் முழுவதும் திருவள்ளுவர் பண்பாட்டு மையங்கள் நிறுவப்படும் என்று அறிவித்துள்ளது. அதில், "இந்தியாவின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தவும், யோகா, ஆயுர்வேதம், இந்திய மொழிகள், பாரம்பரிய இசை ஆகியவற்றை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் விதமாக, பயிற்சி அளிக்கும் விதமாகவும் உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாச்சார மையங்களை நிறுவுவோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின் வளமான ஜனநாயக மரபுகளை ஜனநாயகத்தின் தாயாக நினைத்து மேம்படுத்துவோம்." என்று தெரிவித்துள்ளது.
இதுதவிர, முக்கிய நாடுகளில் யோகா மற்றும் ஆயுர்வேத கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி அதற்கான படிப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட சிலைகள் மற்றும் கலைப்பொருட்களை மீண்டும் இந்தியா கொண்டு வர பாடுபடுவோம், உலகெங்கிலும் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களில் இந்தியாவில் உள்ள செம்மொழிகளை கற்பிக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.
தமிழ் மொழி நமது பெருமை: இதனை அறிவித்துப் பேசிய பிரதமர் மோடி, “தமிழ் மொழி எங்களின் பெருமை. அதன் பெருமையை உலகளவில் உயர்த்த பாஜக அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். வளர்ச்சி மற்றும் மரபு என்ற மந்திரத்தில் பாஜக நம்பிக்கை கொண்டுள்ளது. உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாச்சார மையங்களை உருவாக்குவோம்” என்று கூறினார்.
வெளியுறவுக் கொள்கை: வெளியுறவுக் கொள்கை தொடர்பாக தேர்தல் அறிக்கையில் சில உத்தரவாதங்களை சொல்லியுள்ள பாஜக, "கடந்த பத்து ஆண்டுகளில் உலகளவில் நம்பகமான குரலாக பாரதத்தை (இந்தியாவை) நிறுவியுள்ளோம். மனித குலத்தின் நலனுக்காக இந்தியாவின் சிந்தனை மற்றும் செயலை நாம் நிரூபித்துள்ளோம். மனிதனை மையமாகக் கொண்ட நமது உலகக் கண்ணோட்டம், ஒருமித்த கருத்து ஆகியவை உலக அளவில் நம்மை ஆசியாவின் குரலாக இருக்க உதவியது.
இன்று உலகமே இந்தியாவை ஜனநாயகத்தின் தாய் என்று நம்புகிறது. உலகெங்கிலும் உள்ள புலம்பெயர்ந்த நமது மக்கள் அதிகாரம் பெற்றவர்களாக உள்ளனர். நமது நாகரிக விழுமியங்கள், சிந்தனைகள், ஞானம் மற்றும் அறிவு ஆகியவை உலக அரங்கில் பெருமைக்குரிய இடத்தைப் பெற்றுள்ளன." என்று கூறி, ஐநா அமைப்பில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்குவது, தீவிரவாதத்தை தொடர்ந்து எதிர்ப்பது என்று வாக்குறுதிகளையும் அளித்துள்ளது.