

தருமபுரி: மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுவையில் இரண்டாம் இடத்தை கைப்பற்ற அதிமுக, பாஜக அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தருமபுரியில் தெரிவித்தார்.
தருமபுரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஆ.மணிக்கு ஆதரவு திரட்டும் வகையில் பென்னாகரத்தில் நேற்று இரவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சார பொதுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பேச, அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று தருமபுரி வந்தார்.
கூட்டத்தில் பங்கேற்கும் முன்பு தருமபுரியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியது: உலகிலேயே அதிக ஊழல் செய்த கட்சி பாஜக தான். அவர்கள் சட்டப்படியான ஊழலில் ஈடுபட்டுள்ளனர். 2017-ம் ஆண்டு அவர்கள் கொண்டு வந்த தேர்தல் பத்திரம் திட்டத்துக்காக ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட ரிசர்வ் வங்கிச் சட்டம் உள்ளிட்ட 5 சட்டங்களை திருத்தினர். அதே நேரம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை செல்லாக்காசாக மாற்றிவிட்டனர். இந்த தேர்தல் பத்திரம் திட்டம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்றும், ஊழலுக்கு வழி வகுக்கும் என்றும் கூறி இத்திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.
இந்த தேர்தல் பத்திர ஊழல் உலகிலேயே பெரிய ஊழலாகக் கருதப்படுகிறது. இத்திட்டம் மூலம் தேர்தல் நிதி பெற அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சிபிஐ ஆகிய அமைப்புகளை மத்திய பாஜக அரசு அடியாட்கள் போல செயல்பட வைத்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி வெற்றி பெறும். இந்த 40 தொகுதிகளிலும் இரண்டாம் இடத்தை கைப்பற்ற அதிமுக, பாஜக அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. வாக்காளர்கள் இண்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்ச்சியின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் குமார், நிர்வாகிகள் மாரிமுத்து, இளம்பரிதி, கிரைஸாமேரி உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.