“எந்த விசாரணைக்கும் தயார்; நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன்” - இயக்குநர் அமீர்

இயக்குநர் அமீரின் சென்னை தி.நகர் அலுவலகம் | படம்: எம்.வேதன்.
இயக்குநர் அமீரின் சென்னை தி.நகர் அலுவலகம் | படம்: எம்.வேதன்.
Updated on
1 min read

மதுரை: “எந்த விசாரணைக்கும் நான் தயாராக இருக்கிறேன். நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன்” என்று இயக்குநர் அமீர் மதுரையில் இன்று (ஏப்.10) செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தார்.

முன்னதாக, போதைப் பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக ஜாபர் சாதிக், இயக்குநர் அமீரின் வீடுகள், ஓட்டல் அதிபரின் அலுவலகம் உட்பட சென்னையில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று (செவ்வாய்க் கிழமை) அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று (ஏப்.10) ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிறப்புத் திடல் தொழுகையி்ல் இயக்குநர் அமீர் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியபோது, “ரமலான் மாதம் 30 நாட்கள் நோன்பு நோற்று முடித்து இன்று ரம்ஜான் பண்டிகையை மகிழ்ச்சியோடு் கொண்டாடுகிறோம். அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் அனைவரும் கேட்பது போல் என்னிடம் என்சிபி (போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார்) 11 மணி நேரம் விசாரணை நடத்தியது, நேற்று அமலாக்கத் துறையினர் ரெய்டு நடத்தியது உண்மைதான். அமலாக்கத் துறை சோதனை நேற்று இரவு முடிவடைந்தது. இந்த விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே, எந்த விசாரணைக்கும் நான் தயார் என்பதை மீண்டும் மீண்டும் நான் சொல்லி வருகிறேன்.

அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையின்போது என்ன எடுத்தார்கள் என்பதை நான் சொல்ல முடியாது. அதை அவர்கள் தான் சொல்ல வேண்டும். வழக்கு நிலுவையில் இருக்கும்போது நான் விமர்சிக்க ,முடியாது,

அமலாக்கத் துறை விசாரணை நேர்மையாக நடைபெறுகிறது. விசாரணைக்கு அழுத்தம் இருக்கிறதா இல்லையா என்பது எனக்கு தெரியாது, இது குறித்து முழுமையாக பேச எனக்குக் கொஞ்சம் அவகாசம் வேண்டும். ஆனால், என் மீதான குற்றச்சாட்டுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை நான் நிரூபிப்பேன். இறைவன் மிகப் பெரியவன் என்பது தான் என்னிடம் இப்போதைக்கு இருக்கும் வார்த்தை. எப்போதும் அதைச் சொல்லித் தான் கடந்து செல்வேன். இப்போதும் கடந்து செல்கிறேன்.” இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in