Last Updated : 09 Apr, 2024 09:26 PM

2  

Published : 09 Apr 2024 09:26 PM
Last Updated : 09 Apr 2024 09:26 PM

சேலம் பாஜக பிரமுகர் வீட்டில் சோதனை நடத்த பறக்கும் படை முயற்சி: தொண்டர்கள் திரண்டதால் பதற்றம்

சேலம் பாஜக பிரமுகர் சுரேஷ் பாபுவின் வீட்டில், வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து, சுரேஷ்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார் உடன் பாமக எம்எல்ஏ அருள்.

சேலம்: சேலத்தில் பாஜக மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ் பாபுவின் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து, பறக்கும் படை மற்றும் போலீஸார் சோதனை மேற்கொள்ள காத்திருப்பதால் அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது.

சேலம் மாநகர் மாவட்ட பாஜக தலைவர் சுரேஷ் பாபு சேலம் குரங்கு சாவடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் இன்று மாலை வருமானவரித்துறை மற்றும் பறக்கும் படையினர் திடீர் சோதனைக்கு வந்தனர். வருமான வரி துறையினர் சுரேஷ்பாபுவின் வீட்டில் சோதனை நடத்திவிட்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து, பறக்கும் படையினர் , காவல் உதவி ஆணையர் நிலவழகன் தலைமையிலான போலீஸார் சுரேஷ்பாபுவின் வீட்டில் சோதனை நடத்துவதற்காக காத்திருந்தனர்.

இந்நிலையில் சுரேஷ்பாபுவின் ஆதரவாளர்கள் அவரது வீட்டுக்கு திரண்டு வந்தனர். மேலும் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவை சேர்ந்த தொண்டர்களும் சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள் உள்ளிட்டோரும் சுரேஷ்பாபு வீட்டுக்கு வந்தார். சுரேஷ்பாபுவின் வீட்டில், பாஜக மற்றும் பாமக தொண்டர்கள் திரண்டு இருப்பதால் அவரது வீட்டில் சோதனை மேற்கொள்ள முடியாமல் போலீஸார் காத்திருக்கின்றனர்.

போலீஸாரை சுரேஷ்பாபுவின் வீட்டுக்குள் செல்ல விடாமல் வீட்டு வாசலிலேயே, பாஜக பாமக தொண்டர்கள் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சுரேஷ்பாபு வீடு உள்ளிட்டப் பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுரேஷ்பாபு, “எனது வீட்டில் பணம் , நகை இருப்பதாக வந்த ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து எனது வீட்டில் சோதனை இட வந்திருப்பதாக வருமான வரித்துறையினரும், போலீஸாரும் தெரிவித்தனர். எனது வீட்டில் சோதனை இட்ட வருமான வரித்துறையினர் சோதனையில் ஏதும் கிடைக்காததை தொடர்ந்து புறப்பட்டு சென்றனர்.

ஆனால் போலீஸார் தாங்கள் தனியாக சோதனை நடத்த வேண்டும் என்றுகூறி இங்கேயே காத்துள்ளனர். இதனால் தேர்தல் நேரத்தில், பிரச்சாரத்தை மேற்கொள்ள முடியாமல் இங்கேயே முடங்க வேண்டியதாகிவிட்டது. எனது வீட்டில் சோதனை நடப்பதாக தகவல் அறிந்து பாஜக மற்றும் கூட்டணி தொண்டர்களும் இங்கு வந்து வட்டனர்.

எங்கள் பிரச்சாரத்தை தடுக்கவே இந்த சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் எனது வீட்டில் வருமான வரித்துறையினர் எதனையும் கைப்பற்றாத நிலையில், வேறு ஏதோ நோக்கத்தோடு போலீஸார் இங்கு முகாமிட்டுள்ளனர் என்று சந்தேகிக்கிறோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x