“அதிமுக, பாமக பல அணிகளாக உடையும்” - கே.பாலகிருஷ்ணன் 

“அதிமுக, பாமக பல அணிகளாக உடையும்” - கே.பாலகிருஷ்ணன் 
Updated on
1 min read

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக, பாமக ஆகியவை பல அணிகளாக உடையும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

பெரம்பலூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: சென்னையில் இருந்து நெல்லைக்கு ரயில் மூலம் கொண்டு செல்ல முயன்றபோது ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணத்தை கொண்டு செல்ல முயன்றவர்களில் ஒருவர் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உறவினர்.

நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்ற தோல்வி பயத்தில் வாக்காளர்களிடத்தில் பண பலத்தைக் காட்டி வெற்றி பெறலாம், குறைந்தபட்சம் டெபாசிட் தொகையையாவது தக்க வைக்கலாம் என்ற நோக்கத்தில் இந்த நடைமுறையை பாஜகவினர் கையாண்டுள்ளனர்.

ஊழலை ஒழிப்பது தான் எங்களது நோக்கம் என கூறிவரும் பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த ரூ.4 கோடி எங்கிருந்து வந்தது? இது யாருக்காக அனுப்பப்படுகிறது என்ற விவரத்தை கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தால் அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம். இதுகுறித்து பாஜக தலைவர்கள் யாருமே வாய் திறக்காத நிலையில் அவர்கள் தான் இதற்கு பின்னால் உள்ளனர் என்பது தெரிய வருகிறது.

இது மட்டுமின்றி தேர்தல் நன்கொடை பத்திரம் விவகாரம் நாடே சிரிக்கும் அளவுக்கு உள்ளது. ஊழலைப் பற்றி பேசுவதற்கு பாஜகவினருக்கு அருகதை இல்லை. இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியும் வாய் திறக்கவில்லை. இதனால் பாஜகவும், அதிமுகவும் கள்ள உறவு வைத்துள்ளன என்பது வெட்ட வெளிச்சம்.

அதிமுக ஏற்கெனவே பல அணிகளாக பிரிந்துள்ளது. தேர்தல் முடிவுக்குப் பிறகு அது மேலும் பல அணிகளாக வாய்ப்புள்ளது. பாமகவின் நிலையும் அப்படித்தான். தேர்தலுக்குப் பிறகு அரசியலில் மிகப்பெரிய சுனாமி அலை வீசப்போகிறது என்பது மட்டும் நிச்சயம். இவ்வாறு தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in