Published : 09 Apr 2024 04:45 PM
Last Updated : 09 Apr 2024 04:45 PM

ஆர்.எம்.வீரப்பனின் இறுதிச் சடங்கை அரசு மரியாதையுடன் நடத்த திருநாவுக்கரசர் கோரிக்கை

சென்னை: “ஆர்.எம்.வீரப்பனின் மறைவால் தமிழக அரசியல் ஒரு நேர்மையான அரசியல் தலைவரை இழந்து நிற்கிறது. தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான ஆர்.எம்.வீரப்பனின் இறுதிச் சடங்கை அரசு மரியாதையுடன் நடத்த வேண்டுமென்று தமிழக முதல்வரையும், தமிழக அரசையும் கேட்டுக் கொள்கிறேன்” என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தனது இரங்கல் குறிப்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராக்கோட்டை எனும் கிராமத்தில் பிறந்த முன்னாள் அமைச்சர் அருமை அண்ணன் ஆர்.எம். வீரப்பன். வயது மூப்பின் காரணத்தால் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார் எனும் செய்தி அறிந்து மன வருத்தமும், வேதனையும் அடைகிறேன்.சாதாரண குடும்பத்தில் பிறந்து தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்தும், நாடக கம்பெனிகளில் பணியாற்றியும், பெரியார், அண்ணா போன்றவர்களால் திராவிட இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவராய் தன்னை இணைத்துக் கொண்டு அரசியல் உலகிலும், கலை உலகிலும் பிரவேசித்து புகழ் கொடி நாட்டினார். மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் திரைப்பட கம்பெனியின் மேலாளராக பணியாற்றத் தொடங்கி எம்ஜிஆரின் வலது கரமாய் , நம்பிக்கை நட்சத்திரமாய் திகழ்ந்தவர்.

எம்ஜிஆர் திரையுலகில் உயந்திடவும், பல திரைப்படங்களில் வெற்றிகளை அடைந்திடவும் துணை நின்றவர். பிறகு சத்யா மூவீஸ் எனும் திரைப்பட நிறுவனத்தை துவங்கி எம்ஜிஆர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முன்னணி கதாநாயகர்களை கொண்டு ஏராளமான வெற்றிப் படங்களை தமிழ் திரையுலகில் தயாரித்து வெற்றிக் கொடி நாட்டியவர்.

எம்ஜிஆரின் அமைச்சரவையில் அறநிலையத் துறை போன்ற முக்கிய துறைகளை ஏற்று அருளாளர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவர். ஆலயத் திருப்பணிகளை அற்புதமாய் செய்து பெருமை பெற்றவர். கம்பன் கழகம் போன்ற பல்வேறு தமிழ் அமைப்புகளில் தலைமையேற்றும், பங்கேற்றும் மிகச் சிறந்த சொற் பொழிவாளராய் தமிழ் தொண்டாற்றினார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இருந்து திறம்பட செயல்பட்டார். எம்ஜிஆர் கழகம் எனும் கட்சியை தொடங்கி மறைந்த முதல்வர் கருணாநிதிக்கு நெருக்கமாகவும் துணையாகவும் நின்றார். அரசியல் உலகில் என் போன்ற பலரை உருவாக்கிய பெருமைக்குரியவர். சட்டமன்ற உறுப்பினர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக அமைச்சர்களாக, மக்கள் பிரதிநிதிகளாக பலரை உருவாக்கியவர். அவரால் பொறுப்புக்களையும் பலர் பெற்றனர்.

பல்லாண்டுகள் அமைச்சராக பணியாற்றி இருந்தாலும், எந்த வித ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆட்படாமல், கரைபடியா கரத்தோடு, நேர்மையானவராக திகழ்ந்தவர். அன்பும் பாசமும் நிறைந்தவர், பழகுவதற்கு இனியவர், எளிமையானவர். சிறந்த பண்பாளர். அவர் புதுக்கோட்டை மாவட்டத்துக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்தார். சுமார் 50 ஆண்டுகளாக அவரோடு நெருங்கி பழகும் வாய்ப்பை பெற்றிருந்தேன். அவரது மறைவு தனிப்பட்ட முறையில் என் போன்றவர்களுக்கு பேரிழப்பாகும், அவரது மறைவால் தமிழக அரசியல் ஒரு நேர்மையான அரசியல் தலைவரை இழந்து நிற்கிறது.

அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை துயருடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து வாடும் அவருடைய துணைவியார், மகன்கள், மகள்கள் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் இயக்கத்தினர் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான ஆர்.எம்.வீரப்பனின் இறுதிச் சடங்கை அரசு மரியாதையுடன் நடத்த வேண்டுமென்று தமிழக முதல்வரையும், தமிழக அரசையும் கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x