

மதுரை: தமிழகத்தல் உள்ள 2 லட்சம் எச்ஐவி பாதிக்கப்பட்டோருக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதி அளிக்க எச்ஐவி உள்ளோர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், மாநில முழுவதும் எச்ஐவி உள்ள மக்கள் தேர்தல் கோரிக்கைகள் முன் வைத்துள்ளனர். அரசியல் கட்சிகள் அந்த கோரிக்கைளை நிறைவேற்று தர வாக்குறுதி தருமாறு அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில எச்ஐவி உள்ளோர் கூட்டமைப்பு செயலாளர் கருணாநிதி கூறியது: ''தமிழத்தில் உள்ள 2 லட்சம் எச்ஐவி உள்ளவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 10 லட்சம் நபர்களின் சார்பாக சில கோரிக்கைகளை அரசியல் கவனத்துக்காக சொல்கிறோம். தமிழக அரசு மூலமாக எச்ஐவி உள்ளவர்களுக்கு தனியாக நல வாரியம் அமைத்து தர வேண்டும்.
தமிழக அரசு மூலமாக எச்ஐவி உள்ள மக்களுக்கு கிட்னி டயாலிசிஸ் மிஷின் மண்டல வாரியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எச்ஐவி உள்ள மக்களுக்கு அனைத்து விதமான அறுவை சிகிச்சையும் அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் செயல்படுத்த உத்தரவிட வேண்டும்.
தமிழ்நாடு அரசு நிதி உதவி மூலமாக டான்சாக்ஸ் (TANSACS) வழியாக எச்ஐவி உள்ளவர்கள் கூட்டமைப்பு மூலமாக செயல்படுத்தப்படும் திட்டத்திற்கு நிதி அதிகரித்து வழங்க வேண்டும்.
மேலும், அனைத்து மாவட்டங்களில் இத்திட்டத்தினை அதிகரித்து தர வேண்டும். எச்ஐவி உள்ள ஏழை எளிய மக்களுக்கு வீடு இல்லாமல் வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு அரசு மூலமாக இலவச வீடு கட்டித் தர ஆவணம் செய்ய வேண்டும். எச்ஐவி உள்ளவர்களின் குழந்தைகளுக்கு அனைத்து தனியார் கல்லூரிகளிலும் இலவச உயர்கல்வி படிப்பதற்கு அரசு உதவிட வேண்டும்.
தமிழத்தில் உள்ள அனைத்து ஏஆர்டி மையங்களிலும் முழு நேர மருத்துவர்களை பணிய மறுத்த வேண்டும் (தற்போது பொது மருத்துவ பிரிவில் உள்ள மருத்துவர்களை ஏஆர்டி பொறுப்பு மருத்துவராக பணியமர்த்தி உள்ளனர்). இந்த கோரிக்கைகளை தேர்தல் வாக்குறுதியாக ஏற்று எச்ஐவி உள்ள மக்களுக்காக செய்து தர வேண்டும்'' என்றார்.