Published : 07 Apr 2024 04:12 AM
Last Updated : 07 Apr 2024 04:12 AM

சென்னை 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் ஆகஸ்டில் வருகை

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 4-வது வழித்தடத்தில் ஒரு பகுதியான கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் - பூந்தமல்லி வரையிலான உயர்மட்டப் பாதையில் இயக்குவதற்காக, ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரயில் வரும் ஆகஸ்ட்டில் சென்னைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த 3 வழித் தடங்களில் பணிகள் முடிந்த பின், 138 ஓட்டுநர் இல்லாத ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக, ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ ரயில்களையும், இரண்டாம் கட்டமாக 36 மெட்ரோ ரயில்களையும் தயாரிக்க அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

அதன்படி, முதல் மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகள் தயாரிப்பு பணி ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் கடந்த பிப்.9-ம் தேதி தொடங்கியது. இப்பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித் தடத்தில் பூந்தமல்லி - கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் வரையிலான உயர்மட்டப் பாதையில் இயக்குவதற்காக, ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரயில் வரும் ஆகஸ்ட்டில் சென்னைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான (26.1 கி.மீ.) 4-வது வழித்தடம் ஒன்றாகும். இந்த வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை உயர்மட்டபாதையாகவும் அமைக்கப்படுகிறது.

இந்த வழித் தடத்தில் 9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் இடம்பெற உள்ளன. தற்போது, உயர்மட்ட, சுரங்கப்பாதை பணி, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி ஆகிய பணிகள் பல்வேறு இடங்களில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த வழித் தடத்தில் கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் - பூந்தமல்லி வரையிலான உயர்மட்ட வழித் தடத்தில் பணிகள் தீவிர மடைந்துள்ளன. இந்த பகுதியில் தற்போது வரை 600-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

பல இடங்களில் மேம்பாலம் அமைத்து, அடுத்த கட்டமாக தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப் பட்டுள்ளது. இந்தப் பாதையில் இயக்கப்படும் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் பெட்டிகள் ஆகஸ்ட் மாதம் சென்னைக்குக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் ஒரு பெட்டியும், அடுத்த 2 மாதங்களில் 6 கூடுதல் ரயில் பெட்டிகளும் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. முதல் ரயில் வருவதற்கு முன்பு, உயர்த்தப்பட்ட ரயில் பாதையில் ஜூலை மாதத்துக்குள் தண்டவாளம் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x