

சென்னை: பிரதமர் மோடி ஏப்.9-ம் தேதி சென்னை வரவுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆலோசனை நடத்தினார்.
பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட பிரதமர் நரேந்திர மோடி, வரும் 9-ம் தேதி சென்னை வரவுள்ளார். மேலும், ரோடு ஷோ நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் சென்னை வருகையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதில், கூடுதல் காவல் ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா (தெற்கு), சுதாகர் (போக்குவரத்து), அஸ்ரா கார்க் (வடக்கு), செந்தில்குமாரி (மத்திய குற்றப்பிரிவு) உட்பட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், இணை ஆணையர்கள் மற்றும் துணை ஆணையர்களுடன் காணொலி மூலமும் ஆலோசனை வழங்கப்பட்டது.
பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்புப் பணியில் 15 ஆயிரம் போலீஸார் ஈடுபட உள்ளனர். மேலும், பிரதமர் பிரச்சாரம் செய்யும் இடங்களிலும், அதன் சுற்றுப்புறங்களிலும், பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என போலீஸ் அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவிட்டார்.
சென்னையில் உள்ள லாட்ஜ்கள், தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் விடுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனைகள் மேற்கொண்டு சந்தேக நபர்கள் மற்றும் அந்நிய நபர்கள் உள்ளனரா என கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
அதேபோல், பிரதமரின் சென்னை வருகையின்போது சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட உள்ளது.