

கிருஷ்ணகிரி: ஓசூரில் திமுக பிரச்சாரத்துக்கு அழைத்து வரப்பட்ட பெண்கள், ''மகளிர் உரிமைத் தொகை எங்கே?'' என கட்சி நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்எல்ஏ கோபிநாத் போட்டியிடுகிறார். தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கோபிநாத் ஓசூர் மாநகரத்தில் பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார். அப்போது, ஓசூர் திமுக எம்எல்ஏ பிரகாஷ், மேயர் சத்யா ஆகியோரும் வேட்பாளருடன் வீதி வீதியாக சென்று வாக்குகளை சென்றனர்.
குருப்பட்டி என்னுமிடத்தில் வேட்பாளர் வருகைக்காக திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பொதுமக்கள், பெண்களை அழைத்து வந்தனர். அப்போது அங்கு பிரச்சாரம் மேற்கொள்ள வேட்பாளருடன் வந்த ஓசூர் மேயர் சத்யா, திமுக அரசின் செயல்பாடுகள், சாதனைகளை விளக்கமாக பேசினார். அப்போது, பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.1000 வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
அவர் பேசி முடித்தவுடன், பிரச்சாரத்துக்கு அழைத்த வரப்பட்ட பெண்கள், "தகுதி வாய்ந்த எங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைப்பதில்லை. வசதி படைத்தவர்களுக்கு தான் காசு தர்றாங்க. கூலி வேலைக்கு போற எங்களுக்கு பணம் வருவதில்லை. நாங்கள் மட்டும் என்ன பாவம் செய்தோம்?" என திமுகவினரை நோக்கி கேள்விகளை எழுப்பினர்.
அந்தப் பெண்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல், வேறு வழியின்றி வேட்பாளரும், எம்எல்ஏவும், மேயரும் வேறு இடம் நோக்கி பிரச்சார வாகனத்தை திருப்பி சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.