

சென்னை: வடலூரில் சத்திய ஞானசபை நிலத்தில் வள்ளலார் சர்வதேச மையத்தில் என்னென்ன வசதிகள் செய்யப்பட உள்ளன என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், வடலூரில் உள்ள வள்ளலார் தெய்வ நிலையத்தின் சத்திய ஞான சபை முன்பு இருக்கும் 70 ஏக்கர் பரப்பில் உள்ள பெருவெளியில் சுமார் 100 கோடி ரூபாய் செலவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க ஒப்புதல் அளித்து, தமிழக அரசு 2023-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி அரசாணை வெளியிட்டது. பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மிக மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் வினோத் ராகவேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “அருட்பெருஞ்ஜோதி தரிசனத்துக்காக பக்தர்கள் கூடும் இடத்தில் கட்டுமானம் மேற்கொண்டால், அது தனது புனிதத்தை இழந்து விடும். நூறு ஆண்டுகளை கடந்த புராதன கோயிலில் மாற்றங்களை செய்வது புராதன சின்னங்கள் சட்டத்துக்கு விரோதமானது.
அரசுக்கு சொந்தமாக அருகில் ஏராளமான நிலம் உள்ளதால் அங்கு வள்ளலார் சர்வதேச மையத்தை அமைக்கலாம். கோயில் சொத்துக்களை வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தக் கூடாது” என வாதிடப்பட்டது.
அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், “சத்திய ஞான சபையை அரசு எடுத்துக் கொள்ள முயற்சிப்பதாக கூறுவது தவறு. சர்வதேச மையம் அமைத்தாலும், அந்த நிலம் ராமலிங்க அடிகளார் அறக்கட்டளை வசம்தான் இருக்கும். தைப்பூச நாளில் ஜோதி தரிசனத்துக்காக மூன்றரை லட்சம் பக்தர்கள் திரள்வது உண்டு.
சத்திய ஞான சபை முன் அமைந்துள்ள 70 ஏக்கர் நிலத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என பக்தர்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்தது. அங்கு நூலகம், அருங்காட்சியகம், ஓய்வறைகள், மருத்துவ வசதிகள் ஏற்படுத்தும் வகையில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படுகிறது” என தெரிவித்தார்.
இதையடுத்து, வள்ளலார் சர்வதேச மையத்தில் என்னென்ன வசதிகள் இடம்பெறப் போகின்றன என்பது குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 24-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.