

சென்னை: நேர்மையான, முறைகேடு இல்லாத தேர்தலை உறுதி செய்யும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரத்துக்கு நடுவில் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை இணைப்பதை தவிர்க்க வேண்டும் எனக் கோரி, திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர்ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தற்போது நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடி அதிகாரியின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டுப்பாட்டு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும். ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஒப்புகைச் சீட்டு முறையைதேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி கடைபிடித்து வருகிறது.
தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமாக தேர்தலை நடத்துவது பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. கேசவானந்த பாரதி மற்றும் ராமேஸ்வர் பிரசாத் ஆகிய வழக்குகளில் தேர்தல் என்பது ஜனநாயக அடிப்படையில் வெளிப்படையாக, நேர்மையாக நடத்தப்பட வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
எனவே நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நடைபெறும் வாக்குப்பதிவின்போது எந்த இடத்திலும் தொழில்நுட்ப ரீதியாகவோ அல்லது செயற்கையாகவோ முறைகேடுகள் நடைபெற இடம் அளித்து விடக்கூடாது. தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்தப்பட வேண்டும்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரத்துடன் நேரடியாக இணைக்கப்பட வேண்டும். இந்த இரு இயந்திரங்களுக்கு நடுவில் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை இணைக்க சட்டத்தில் இடமில்லை. ஆனால் தற்போது தேர்தல் ஆணையம் இந்த இரு இயந்திரங்களுக்கு நடுவில் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை இணைப்பதால் பல்வேறு முறைகேடுகள் நடைபெற வழிவகுத்துவிடும்.
மேலும், வாக்குப்பதிவு இயந்திரத்தை ஒப்புகைச்சீட்டு இயந்திரத்துடன் இணைத்துவிட்டால், வாக்குப்பதிவு இயந்திரம் கட்டுப்பாட்டு இயந்திரத்தின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் வராது. எனவே, தேர்தலுக்கு முன்பாகவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்து, இந்த தேர்தலை நேர்மையாக நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.
குறிப்பாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கும், கட்டுப்பாட்டு இயந்திரத்துக்கும் நடுவே ஒப்புகை சீட்டு இயந்திரத்தை இணைக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது