

சென்னை: சென்னை மடிப்பாக்கத்தில் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் சேமித்து வைத்திருந்த கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 7 மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: மடிப்பாக்கம், ராம்நகர் விரிவு, தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (35). பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை சில்லறை கடைகளில் கொள்முதல் செய்து, தனது கிடங்கில் சேமித்து வைத்து தரம் பிரித்து, மறு சுழற்சி செய்யும் ஆலைகளுக்கு மொத்த விலையில் விற்பனை செய்கிறார்.
இவரது கிடங்கு அதே பகுதியில், 6-வது தெற்கு விரிவு தெருவில் சுமார் 4,000 சதுர அடி பரப்பில் உள்ளது. நேற்று காலை 11.30 மணி அளவில், இந்த கிடங்கில் திடீரென தீ பிடித்து கரும்புகை வெளியேறியது. அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
துரைப்பாக்கம் தீயணைப்பு படையினர் சம்பவ இடம் விரைந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயைஅணைக்க முயன்றனர். ஆனால், கிடங்கிலிருந்த பழைய பிளாஸ்டிக், கழிவு எண்ணெய் உள்ளிட்ட பொருட்களில் தீ பற்றியதால், கரும்புகையுடன் தீ அதிகமாகி கொழுந்து விட்டு எரிந்தது.
இதையடுத்து கிண்டி, அசோக்நகர், மேடவாக்கம், சைதாப்பேட்டைஉள்ளிட்ட பகுதிகளிலிருந்து கூடுதலாக 6 தீயணைப்பு வாகனங்கள்சம்பவ இடம் வரவழைக்கப்பட்டன. அதற்குள், அப்பகுதியில் இருந்த சிறுவர்கள், முதியோருக்கு சிறிதளவுசுவாசப் பிரச்சினை ஏற்பட்டதால், ஆம்புலன்ஸ் வாகனமும் வரவழைக்கப்பட்டது. மடிப்பாக்கம் காவல் நிலைய போலீஸாரும் சம்பவ இடம் விரைந்தனர்.
மேலும், தீப்பற்றிய கிடங்கு அமைந்துள்ள தெருவைச் சுற்றி, வேறு வாகனங்கள் செல்ல முடியாதபடி போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. இச்சம்பவத்தில், அருகிலிருந்த பிரியாணி கடை, முடிதிருத்தகம் உள்ளிட்ட 4 கடைகளும் சேதம் அடைந்தன. மொத்தம் 70-க்கும்மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 7 மணி நேரம் போராடி, தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பின், கிடங்கின் உள்ளே சென்று தீயை அணைக்கவும், பாதி எரிந்த நிலையில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்தவும் புல்டோசர் வாகனம் வரவழைக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து மடிப்பாக்கம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.