Published : 02 Apr 2024 06:49 AM
Last Updated : 02 Apr 2024 06:49 AM

மத்திய சென்னையில் 31 பேர் போட்டி: தீவிர வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள்

படங்கள்: ம.பிரபு

சென்னை: மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் 2019 தேர்தலைபோல இந்தத் தேர்தலிலும் 31 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் மற்றவர்களின் குறைகள், நிறைகளைப் பட்டியலிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் வில்லிவாக்கம், எழும்பூர் (தனி), துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணாநகர் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

இத்தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 6 லட்சத்து 67 ஆயிரத்து 465, பெண் வாக்காளர்கள் 6 லட்சத்து 82 ஆயிரத்து 241, மூன்றாம் பாலினத்தவர் 455 என மொத்தம் 13 லட்சத்து 50 ஆயிரத்து 161 வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இத்தொகுதியில் 31 பேர் போட்டியிட்டனர். அதுபோல இந்த முறையும் 31 பேர் களத்தில் உள்ளனர். மத்திய சென்னை உருவானதில் இருந்து இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் திமுக8 முறையும், காங்கிரஸ் 3 முறையும், அதிமுக 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்
தயாநிதி மாறன் வள்ளுவர் கோட்டம் பகுதியில் நேற்று வாக்கு சேகரித்தனர்.

தயாநிதி மாறன் (திமுக) - 2004, 2009, 2019-ம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் தயாநிதி மாறன்தான் இந்தமுறையும் களத்தில் உள்ளார். கடந்த காலங்களில் மத்திய ஜவுளித் துறை அமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் ஜவுளிப் பூங்கா அமைத்ததையும், மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது நோக்கியா, சோனி, பாக்ஸ்கான் உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழகத்துக்கு வந்ததையும் கூறி வாக்கு சேகரிக்கிறார்.

அத்துடன், பொய்யைத் தவிர வேறு எதையும் கூறமாட்டேன் என்றுபிரதமர் மோடி உறுதிமொழி எடுத்துள்ளார் என்று கடுமையாக விமர்சித்து வருகிறார். கச்சத்தீவு விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், கச்சத்தீவை மீட்ககடந்த 10 ஆண்டுகளாக பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதனுடன் கூட்டணியில் இருந்த அதிமுகவும் வலியுறுத்தவில்லை. தேர்தல் பத்திரங்கள் முறைகேடு, பிஎம் கேர்ஸ் நிதி மோசடி, சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ள ரூ.7.5 லட்சம் கோடி ஊழலை மறைக்கவும், மக்களை திசை திருப்பவுமே கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். தமிழ்நாடு தேர்தல் முடிந்ததும் இதுபற்றி பேசமாட்டார்கள் என்றும் கடுமையாக சாடி வருகிறார்.

பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் சிந்தாரிப்பேட்டை பகுதியிலும்
நேற்று வாக்கு சேகரித்தனர்.

வினோஜ் பி.செல்வம் (பாஜக) - போதை கலாச்சாரத்துக்கு எதிராக திமுகவை விமர்சித்தும், குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றுகோரியும் வினோஜ் பி.செல்வம் பிரச்சாரம் மேற்கொள்கிறார். மத்திய தொலைத்தொடர்பு் துறை அமைச்சராக இருந்தபோது தயாநிதிமாறன் செய்த முறைகேடுகளை மக்கள் மன்னிக்கக்கூடாது.

கரோனா, மழை வெள்ள பாதிப்பின்போது மக்களைக் காக்க இவர் எதுவும் செய்யவில்லை என்று கடுமையாக சாடி வருகிறார். மேலும், ஆவாஸ் யோஜனா, கரிப் கல்யாண் அன்ன யோஜனா, சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள், மோடி காப்பீடு உள்ளிட்ட மோடியின் பல்வேறு திட்டங்களை எடுத்துக் கூறியும், இத்திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளை முன்னிலைப்படுத்தியும் வாக்கு சேகரிக்கிறார்.

வீடு வீடாக ஸ்டிக்கர் ஓட்டுவது, நோட்டீஸ் வழங்குவது, திண்ணை பிரச்சாரம் செய்வது என பாஜகவினர் பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த மக்களவைத் தொகுதிக்குட்பட்ட துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு 2-வது இடம் பிடித்தவர் வினோஜ் பி.செல்வம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி,
திருமங்கலம் பகுதியில் வாக்கு சேகரித்ததார்.

பார்த்தசாரதி (தேமுதிக) - வீதி, வீதியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி, ஆளும் கட்சியான திமுக மின் கட்டணம், பால் கட்டணம், சொத்துவரி உள்பட பலவற்றை உயர்த்தி மக்களை இன்னலுக்கு ஆளாக்கியுள்ளது என்று குற்றம்சாட்டுகிறார்.

இந்த உயர்வை முதல்வரின் உறவினரான தயாநிதி மாறன் ஏன் என்றுகூட கேட்கவில்லை. மேலும், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பிரச்சாரம் செய்கிறார். பார்த்தசாரதியை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி புரசைவாக்கத்தில் வரும் 15-ம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் வில்லிவாக்கம்
பகுதியிலும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இரா.கார்த்திகேயன் (நாம் தமிழர்) - திமுக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் பல்வேறு இடங்களில் கழிவுநீர் கால்வாய்கள் நிரம்பி வழிகின்றன. போதிய பொதுகழிப்பிடம் கட்டப்படவில்லை. ஏற்கெனவேகட்டப்பட்ட கழிப்பறைகளும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்பன உள்ளிட்ட குறைகளைச் சுட்டிக்காட்டி பிரச்சாரம் செய்கிறார்.

அத்துடன், மத்திய சென்னையில் 40 சதவீதம் பேர் வாக்களிக்கவில்லை. அவர்களை வாக்களிக்கச் செய்தால் தேர்தல் முடிவில் பெரிய மாற்றம்வரும் என்ற நம்பிக்கையில் வாக்காளர்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்திவருகிறார். இவரை ஆதரித்து நாம் தமிழர்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்4-ம் தேதி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இத்தொகுதியில் திமுக, பாஜக இடையே போட்டி வலுவாக இருப்பதால், தொகுதியைத் தக்கவைக்க திமுக முழு பலத்துடன் எதிர்கொள்ள வேண்டிய நிலை இருப்பதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x