

கிருஷ்ணகிரி: தமிழகத்தில் மக்களுக்கு எதிரான ஆட்சி நடைபெற்று வருவதாக, காவேரிப்பட்டணத்தில் தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷை ஆதரித்து, தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: அதிமுக தலைமையில் பலம் வாய்ந்த, சரித்திர கூட்டணி அமைந்துள்ளது. இது மக்கள் கூட்டணி. மேகதாது அணை கட்ட கூடாது என தேமுதிக சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதுவரை வாய் திறக்காத திமுக, தற்போது தேர்தலுக்காக மேகதாதுவில் அணைக்கட்ட விடமாட்டோம் என்கின்றனர்.
மேகதாதுவில் அணை கட்டும் முயற்சி மேற்கொண்டால் அதிமுக, தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம் இணைந்து மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். திமுக என்றாலே கொள்ளை கும்பல். தமிழகத்தில் லஞ்சம், கஞ்சா, டாஸ்மாக், பாலியல் வன்கொடுமை அதிகரித்து சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு எதிரான ஆட்சி நடந்து வருகிறது. எனவே, மக்களாகிய நீங்கள், இந்த தேர்தல் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு சரியான பாடத்தை கற்பிக்க வேண்டும்.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும். குறிப்பாக 80 ஆண்டுகால கோரிக்கையான ஜோலார்பேட்டையில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக ஓசூருக்கு ரயில் பாதை, ஓசூர் மெட்ரோ ரயில் திட்டம், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
தென்பெண்ணை ஆற்றில் வரும் கழிவுநீரை சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், காவேரிப்பட்டணத்தில் தயாரிக்கும் ‘நிப்பட்’ விஜயகாந்த் விரும்பி கேட்பார். இந்த நிப்பட் உரிய அங்கீகாரம் கிடைக்கும் வகையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.