

வேலூர்: வேலூரில் நடிகர் மன்சூர் அலிகானின் தேர்தல் அலுவலகம் முன்பாக அனுமதியின்றி வைக்கப் பட்ட கொடிகள், பேனர்களை பறக்கும் படை அதிகாரிகள் அகற்றினர்.
வேலூர் மக்களவைத் தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார்.
அவர், தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அவரது தேர்தல் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் முன்பாக கட்சியின் கொடி, பதாகைகளும் வைக்கப் பட்டிருந்தன.
இந்நிலையில், மன்சூர் அலி கான் தேர்தல் அலுவலகத்துக்கு நேற்று சென்ற தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அங்கு வைத்திருந்த பேனர்களையும், கொடிகளையும் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம், அங்கிருந்த கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதற்கு, ‘உரிய அனுமதி பெறாமல் பேனர்கள், கொடிகளை வைத் துள்ளதால்தான் அகற்று கிறோம். உரிய அனுமதி பெற்று வைத்துக் கொள்ளுங்கள்’ என்றனர். இதனால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக பறக்கும்படை அதிகாரிகள் கூறும்போது, ‘‘தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி புகாரின் பேரில் அங்கிருந்த பேனர்கள், கொடிகளை அகற்றினோம்’’ என்றனர்.