

கடந்த சனிக்கிழமையன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் தலைவருமான ஜெ.தீபாவின் வீட்டுக்கு வருமானவரித்துறை அதிகாரி என்ற பெயரில் நுழைந்தவர், தற்போது தீபாவின் கணவர் மாதவன் கூறியதாலேயே அப்படிச் செய்ததாகக் கூறியுள்ளார்.
நடந்தது என்ன?
ஜெ.தீபாவின் வீடு சென்னை தி.நகரில் உள்ளது. கடந்த சனிக்கிழமை காலை 7 மணியளவிம் தீபாவின் வீட்டுக்கு ஒருவர் வந்துள்ளார். தனது பெயர் மித்தேஷ் குமார் எனக் கூறிய அவர், தான் வருமான வரித்துறை அதிகாரி என்றும் வீட்டை சோதனையிட தன்னிடம் வாரண்ட் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து, ஜெ.தீபாவின் வழக்கறிஞர் அங்கு வரவழைக்கப்பட்டார். வழக்கறிஞர் அந்த நபர் கொண்டுவந்த வாரண்ட் ஆகியவற்றை ஆராய்ந்து கொண்டிருந்தபோது சந்தேகம் ஏற்படவே அவர் மாம்பலம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்.
மாம்பலம் காவல் நிலைய போலீஸார் வருமான வரித்துறை அதிகாரி எனக் கூறிய நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த நபர் திடீரென அங்கிருந்து தப்பி ஓடினார். அவரைப் பிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் அந்த நபர் நேற்றிரவு (ஞாயிறு இரவு) மாம்பலம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
அந்தர் பல்டி
இந்நிலையில் போலீஸில் சரணடைந்த அந்த நபர், ஜெ.தீபாவின் கணவர் மாதவன் கூறியதாலேயே தான் அவ்வாறு செய்ததாகக் கூறினார். விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்ற அந்த நபர் விழுப்புரம் மற்றும் பாண்டிச்சேரியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். அவர் மேலும் கூறும்போது, "எனது கடைக்கு ஜெ.தீபாவின் கணவர் அடிக்கடி வருவார். அவர், நான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறினார். அப்போதுதான், ஜெ.தீபா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரியாக நடிக்க வேண்டும் என்றும் கூறினார். அதற்கான ஆவணங்களை எனக்கு கூரியர் மூலம் அனுப்பிவைத்தார். அவர் சொன்னபடியே நான் நடந்து கொண்டேன்" என்றார்.
இதனால், இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, பிரபாகரன் மீது மாதவன் போலீஸில் புகார் தெரிவித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.