விசிகவுக்கு பானை சின்னம் வழங்க ஆணையம் மறுப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களுக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மக்களவை தேர்தலில் தங்களுக்கு பொது சின்னமாக பானை சின்னம் ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்தில் விசிக மனு அளித்தது. ஆனால், ‘கடந்த 2 பொதுத் தேர்தல்களில் குறைந்தபட்சம் 1 சதவீதத்துக்கும் குறையாமல் வாக்குகளை பெற்றிருந்தால் மட்டுமே பொது சின்னம் கோர முடியும். எனவே, பொது சின்னமாக பானை சின்னம் வழங்க இயலாது’ என்று ஆணையம் கடிதம் அனுப்பியது.

இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசிக வழக்கு தொடர்ந்தது. 2014 மற்றும் 2019 பொதுத் தேர்தல்களில் முறையே 1.51 சதவீதம் மற்றும் 1.18 சதவீத வாக்குகள் பெற்றதாக தெரிவித்திருந்தது.

இதையடுத்து, விசிகவுக்கு பொது சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவு எடுக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், பொது சின்னம் கோரும் விண்ணப்பத்துடன் கட்சியின் நிதியாண்டு கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று காரணம் கூறி, பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் நேற்று மறுப்பு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இன்று முறையிட விசிக திட்டமிட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in