

சென்னை: நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரி கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் மதிமுக வேட்பாளர்கள் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டுள்ளதாலும், நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளருக்கு பம்பரம் சின்னம் கோரியுள்ளதாலும், அதுதொடர்பான மதிமுகவின் மனு மீது இன்று காலை 9 மணிக்குள் முடிவு எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி கங்கப்பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மதிமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அஜ்மல், "பம்பரம் ஒதுக்கீட்டு சின்னமாகவும் இல்லை. பொது சின்னமாகவும் இல்லை. ஏற்கெனவே மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்திருப்பதால், அதனை பொது சின்னமாக அறிவித்து மதிமுகவுக்கு வழங்குவதில் தேர்தல் ஆணையத்துக்கு எந்த தடையும் இல்லை.
தேர்தல் ஆணையத்திடம் இருந்து ஒரு நேர்மறையான பதிலை எதிர்பார்த்திருந்த நிலையில், எங்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. வரும் 30-ம் தேதிதான் சின்னம் ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட உள்ளது. இரண்டு தொகுதிகளில் போட்டியிடவில்லை என்ற காரணத்தைக்கூறி சின்னம் ஒதுக்கீடு செய்ய மறுக்கப்பட்டுள்ளது. நாங்கள் வேறொரு மாநிலத்தில், ஒரு தொகுதியில் போட்டியிட தயாராக இருக்கிறோம். எனவே, தேர்தல் ஆணையம் எங்களுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க வேண்டும்" என்று வாதிட்டார்.
அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், "ஒரே மாநிலத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டால்தான் ஒதுக்கீட்டு சின்னம் ஒதுக்க முடியும். தற்போது பம்பரம் ஒதுக்கீட்டு சின்னமாக இருக்கிறது. அது பொது சின்னமாக அறிவிக்கப்படவில்லை. பொது சின்னமாக அறிவிக்காதபட்சத்தில், மனுதாரர் கோருவது போல ஒதுக்கீடு செய்து தர முடியாது" என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தற்போதைய நிலையில், இந்த வழக்கில் நீதிமன்றம் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி மதிமுக தொடர்ந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.