வடை சாப்பிட்டு, யுபிஐ-யில் பணம் செலுத்தி பிரச்சாரத்தை தொடங்கிய தமிழிசை

தமிழிசை சவுந்தரராஜன்
தமிழிசை சவுந்தரராஜன்
Updated on
1 min read

சென்னை: தென் சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிடும் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று (புதன்கிழமை) தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

தெலங்கானா ஆளுநர், புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பதவி வகித்து வந்த தமிழிசை சவுந்தரராஜன் சில தினங்கள் முன் தனது பதவிகளை ராஜினாமா செய்தார். அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்த அவர் தமிழகத்தில் இருந்து தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் தெரிவித்தார். அதன்படி, தென் சென்னை தொகுதியின் பாஜக வேட்பாளராக மீண்டும் தேர்தல் அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ள தமிழிசை, திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

தொடர்ந்து இன்று தனது பிரச்சாரத்தை தொடங்கினார் தமிழிசை. கோயம்பேடு பகுதியில் பிரச்சாரம் செய்த அவர், நடைபாதையில் சில பெண்களால் நடத்தப்படும் கடையில் கட்சிக்காரர்களுடன் வடை வாங்கி சாப்பிட்டார் . பின்னர் வடைக்கு யுபிஐ மூலம் பணம் செலுத்தினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “நாடு கண்டுள்ள வளர்ச்சியை இருக்கும் சாட்சிகளைக் கொண்டு விளக்க நான் விரும்பினேன். அதனால், சாலையோரக் கடையில் இருந்து 'வடை' வாங்கினேன். இந்தக் கடையின் உரிமையாளர் ஒரு பெண். அது பெண் சக்தியைக் குறிக்கிறது. அதேபோல் வடைக்கான பணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தினேன். நாம் அனைவரும் கனவு காணும் வளர்ச்சி இதுதான். தாழ்த்தப்பட்ட மக்கள், விளிம்பு நிலை மக்கள், பெண்கள் வரை வளர்ச்சி எட்டியுள்ளது.

நான் எதையும் எடுத்துரைத்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று எதுவும் இல்லை. ஏனென்றால் மத்திய அரசின் வளர்ச்சி எல்லாம் இங்கே வெளிப்படையாகக் காணக் கிடைக்கிறது. நமது நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பிரதமர் மோடியே இந்த நிலையை எட்ட உதவியுள்ளார்.” என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in