Published : 19 Mar 2024 10:45 AM
Last Updated : 19 Mar 2024 10:45 AM

37 கோடி வாக்காளர்கள்... இது மோடி வைக்கும் குறி!

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது நாடு முழுவதும் 17.1 கோடி வாக்காளர்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அந்த தேர்தலில் பாஜக 282 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது 22 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பாஜகவுக்கு ஆதரவு அளித்தனர். அந்த தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்காக 37 கோடி வாக்காளர்களின் ஆதரவை திரட்ட பிரதமர் நரேந்திர மோடி இலக்கு நிர்ணயித்திருக்கிறார். இதன் மூலம் பாஜக தனித்து 370 தொகுதிகளைக் கைப்பற்ற முடியும் என்று பாஜக தலைமை உறுதியாக நம்புகிறது. இதற்காக பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு உள்ளன.

குறிப்பாக சமூக வலைதளங்கள் மூலம் இளம் தலைமுறை வாக்காளர்களை கவர பாஜக திட்டமிட்டுள்ளது. பிரபல பாடகர்கள், கலைஞர்கள், இளம் விளையாட்டு வீரர்களை சமூக வலைதளங்களில் களமிறக்கி இளம் தலைமுறையினரின் வாக்குகளைப் பெற வியூகம் வகுக்கப்பட்டிருக்கிறது.

இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு சார்பில் கடந்த 8-ம் தேதி நாடு முழுவதும் 23 பேருக்கு தேசிய படைப்பாளி விருதுகள் வழங்கப்பட்டன. இந்த 23 பேரும் வெவ்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் ஆவர். ஒவ்வொருவரின் சமூக வலைதள கணக்குகளை சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர்.

அவர்களை கவுரவித்து தேசிய படைப்பாளி விருது வழங்கப்பட்டதன் மூலம் பாஜகவின் இளம் தலைமுறை வாக்கு வங்கி கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தலைமைத் தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரங்களின்படி வாக்காளர் பட்டியலில் 30 வயதுக்கு உட்பட்ட 21.54 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களை பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்ய பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒரு மக்களவைத் தேர்தலில் சராசரியாக 1,900 பூத்துகள் உள்ளன. ஒவ்வொரு பூத்திலும் பாஜக தொண்டர்கள் 370 வாக்குகளை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்று பாஜக தலைமை ஏற்கெனவே அறிவுறுத்தி உள்ளது. அந்த வகையில் ஒரு மக்களவைத் தொகுதியில் பாஜகவுக்கு கூடுதலாக 7 லட்சம் வாக்குகள் கிடைக்கும்.

நாடு முழுவதும் 10 லட்சத்து 35 ஆயிரம் பூத்துகள் உள்ளன. பாஜக தொண்டர்கள் தீவிரமாக களப்பணியாற்றினால் 37 கோடிக்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x