Last Updated : 25 Mar, 2024 04:10 AM

 

Published : 25 Mar 2024 04:10 AM
Last Updated : 25 Mar 2024 04:10 AM

தேர்தல் அறிக்கையில் இடம்பெறாத ஆனைமலையாறு - நல்லாறு திட்டம்: பிஏபி விவசாயிகள் ஏமாற்றம்

ஆனைமலை -நல்லாறு திட்டம்

பொள்ளாச்சி: கோவை, திருப்பூர் மாவட்ட பிஏபி விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான ஆனைமலை -நல்லாறு திட்டம் குறித்து திமுக, அதிமுக தேர்தல் அறிக்கைகளில் தெரிவிக்கப்படாதது பிஏபி விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

கொங்கு மண்டலத்தில் பொள்ளாச்சி, கிணத்துக் கடவு, உடுமலை, பல்லடம், தாராபுரம், காங்கயம், வால்பாறை, திருப்பூர், சூலூர், வெள்ளகோவில் ஆகிய 10 சட்டப்பேரவை தொகுதி விவசாயிகளின் உயிர் நாடியாக பிஏபி திட்டம் உள்ளது. இந்த திட்டத்தில் மொத்தம் 4,21,530 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதற்காக மேல்நீரார் சிற்றணை, கீழ்நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், தூணக் கடவு , பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, மேல் ஆழியாறு, திரு மூர்த்தி ஆகிய அணைகள் கட்டப்பட்டன.

தமிழகம் - கேரளா ஒப்பந்தப்படி ஆனைமலையாறு படுகையில், 2,500 மில்லியன் கன அடி தண்ணீரை சமவெளிக்கு திருப்பும் ஆனைமலையாறு - நல்லாறு சிற்றணை திட்டம் இன்னும் நிறைவேற்றப்படாமல் ஆய்வு நிலையிலேயே உள்ளது. தண்ணீர் பற்றாக் குறையால் பிஏபி பாசனத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும், தண்ணீரின் அளவை பொறுத்து 10 நாட்களில் இருந்து 35 நாட்கள் வரை தண்ணீர் திறக்கப்படுகிறது.

ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஆண்டுக்கு ஒரு முறை பாசனத்துக்கு தண்ணீர் வழங்க முடியும் என்பதால் கோவை, திருப்பூர் பிஏபி விவசாயிகள் ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வரு கின்றனர். கடந்த மக்களவை தேர்தலில் திமுக ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து வாக்குறுதி அளித்து இருந்தது.

தற்போதைய மக்களவை தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் இத்திட்டம் குறித்து எவ்வித வாக்குறுதியும் இடம் பெறவில்லை.மாறாக, பம்பை அச்சன்கோவில் - வைப்பாறு திட்டத்தை வாக்குறுதியாக அளித்துள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கையிலும் இது குறித்து குறிப்பிடப்படவில்லை. 10 சட்டப்பேரவை தொகுதி விவசாயிகளின் மிக முக்கியத்துவம் வாய்ந்த கோரிக்கை, இரு பிரதான கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப் படாதது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஆழியாறு நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் செந்தில் கூறும்போது, ‘‘கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழகத்தில் திமுகவும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தன.இரு மாநிலத்திலும் தோழமை கட்சிகள் ஆட்சி அமைந்ததால் ஆனைமலை - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற முன்னுரிமை அளிக்கப்படும் என எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தற்போது திமுகவின் தேர்தல் வாக்குறுதி பட்டியலில் ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் இடம் பெறவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது. பாசனத்துக்கு நீர் திறக்க கேட்ட விவசாயிகள் தற்போது, உயிர் தண்ணீர் கேட்டு போராட வேண்டியுள்ளது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x