

விருதுநகர்: தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவை தொகுதிகள் மற்றும் தென் மாவட்டத்திலுள்ள தொகுதியிலும் விருதுநகர் முக்கியமானது. இந்த மக்களவை தொகுதியில் விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, சிவகாசி மற்றும் மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் இடம்பெறுகின்றன. இத்தொகுதியில் 1984, 1989, 1991, 2014- என, அதிமுக 4 முறையும், 1977, 2009, 2019- என காங்கிரஸ் 3 முறையும், 1999, 2004ல் மதிமுக 2 தடவையும் வெற்றி பெற்றுள்ளது.
விருதுநகர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட அருப்புக் கோட்டை சட்டமன்ற தொகுதியில் 1977-ல் எம்ஜிஆர் வெற்றி பெற்று முதல்வரானார். இது போன்ற காமராஜர் சாத்தூர் தொகுதியை வென்று முதல்வரான வரலாறும் இந்த மக்களவை தொகுதிக்கு உண்டு. காங்கிரஸ், அதிமுக கட்சி தலைவர்களை உருவாக்கிய, இத்தொகுதியை இந்த முறை நட்சத்திர அந்தஸ்தையும் பெறும் வகையில் களம் உள்ளது.
ஏற்கெனவே காங்கிரஸ் 3 முறை வெற்றிகண்ட நிலையில், இக்கட்சியில் 2 முறை வென்ற மாணிக்கம் தாகூருக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்தலையொட்டி, தங்களது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்த சரத்குமாரின் மனைவியும், பிரபல நடிகையுமான ராதிகா பாஜகவின் ஆதிகாரபூர்வ வேட்பாளராக களம் இறங்கியுள்ளார்.
இத்தொகுதியை 4 முறை தக்க வைத்த அதிமுக, இம்முறை தங்களது கூட்டணி கட்சியான தேமுதிகவுக்கு விருதுநகரை ஒதுக்கியது. மறைந்த விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் களம் இறங்கியுள்ளார். இதன்மூலம் இத்தொகுதியின் மீது முக்கிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜயகாந்தின் சொந்த ஊரான ராமானுஜபுரம் அருப்புக்கோட்டை தொகுதியில் வருவதாலும், தேர்தலுக்கு முன்னதாக விஜயகாந்த் மறைந்ததாலும் அவரது அனுதாப அலை விஜயபிரபாகரனுக்கு வெற்றி வாய்ப்பை தேடி தரலாம் என்ற எதிர்பார்ப்பில் தேர்தல் பணியாற்றுவதாக தேமுதிக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
சமத்துவ மக்கள் கட்சியை கலைத்து, பாஜகவுடன் இணைப்பு ஒருபுறம் இருந்தாலும், நட்சத்திர வேட்பாளர், சரத்குமாரின் சமூக பின்னணி வாக்குகள் என, ராதிகாவுக்கு வெற்றிக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என பாஜகவினர் எதிர்பார்க்கின்றனர். ஏற்கெனவே இருமுறை வென்று, தொகுதிக்கான பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து, தொகுதியை தக்க வைத்து இருப்பதாகவும், இம்முறையும் நமக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்ற அடிப்படையில் காங்கிரஸ் மேலிடத்தில் வலியுறுத்தி ‘சீட் ’பெற்றதால் வெற்றிக் கனி எங்களுக்கே என, காங்கிரஸ் கட்சியினரும் நம்பிக்கை கூறுகின்றனர்.
2 நட்சத்திர வேட்பாளர்களுக்கு, திரை நட்சத்திரங்கள் பிரச்சாரத்திற்கு வாய்ப்புள்ளது என்ற போதிலும், இவர்களுக்கு இணையான பிரச்சாரத்தை மேற்கொள்ளும் சூழலுக்கும் காங்கிரஸ் வேட்பாளரும் தயாராகும் சூழலும் உள்ளது. இவர்களில் கரைசேருவது யாராக இருக்கும் என ஜூன் 4ல் தெரியும்.