Last Updated : 24 Mar, 2024 10:55 PM

 

Published : 24 Mar 2024 10:55 PM
Last Updated : 24 Mar 2024 10:55 PM

“மலைவாழ் மக்கள் முன்னேற்றம், கல்விக்கு பாடுபடுவேன்” - நாம் தமிழர் வேட்பாளர் வீரப்பன் மகள்

கிருஷ்ணகிரி: “நான் வெற்றி பெற்றால் விவசாயிகள், மலைவாழ்மக்கள் முன்னேற்றம் மற்றும் கல்வி வளர்ச்சிக்கு பாடுபடுவேன்” என நாம தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளரும், வீரப்பனின் மகளுமான வித்யாராணி கூறினார்.

கிருஷ்ணகிரியில் இன்று (மார்ச் 24) மாலை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வித்யாராணி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பாஜகவில் மாநில பொறுப்பில் இருந்தேன். அந்தக் கட்சியிலும் மனநிறைவுடன் பணியாற்றினேன். ஆனால் கடந்த, ஒன்றரை ஆண்டுகளாக நான் பெரிய அளவில் செயல்படவில்லை. 'கூச முனிசாமி வீரப்பன்' ஆவணப்பட தொடரில் என் தந்தை மக்களின் நலனுக்காக பேசிய வீடியோக்களை பார்த்தேன்.

என் தந்தை எல்லை தெய்வமாக இருந்து இப்பகுதி மக்களுக்காவும் அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டார். அதே கொள்கைகளை கொண்டு இன்று நாம் தமிழர் கட்சியும் போராடுகிறது. அந்த கொள்கைகளால் ஈர்க்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சியில் சேர்ந்தேன்.

கட்சியில் சேரும்போதே ‘நீ தான் வேட்பாளர்’ என சீமான் தெரிவித்தார். ஆனால் பாஜகவிலும் சீட் தருவதாக கூறினர். நான் சீமானுக்கு கொடுத்த வாக்கால் அதை நிராகரித்து விட்டேன். நான் வெற்றி பெற்றால் விவசாயிகள், மலைவாழ் மக்கள் முன்னேற்றம் மற்றும் கல்வி வளர்ச்சிக்கு பாடுபடுவேன்.

வீரப்பனின் மகளாக, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மக்களை சந்திப்பேன். படேதலாவ் திட்டம், அஞ்செட்டியில் அணை உள்ளிட்ட நீர் திட்டங்கள் விரைந்து அமைக்க பாடுபடுவேன். இளைஞர்கள் சிறு குறு தொழில்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். எந்த கட்சியையும் எதிர்த்து பிரசாரம் செய்ய மாட்டேன். நாங்கள் செய்யப்போகும் திட்டங்கள் குறித்தே எங்கள் பிரசாரம் இருக்கும். நாளை (மார்ச் 25) வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளேன்” இவ்வாறு வித்யாராணி கூறினார்.

இந்நிகழ்வின் போது, கிருஷ்ணகிரி மண்டல பொறுப்பாளர் கரு.பிரபாகரன், சிவராமன் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வித்யாராணி (34) போட்டியிடுகிறார். பி.ஏ.பி.எல் படித்துள்ள இவர், தற்போது கிருஷ்ணகிரியில் வசித்து வருகிறார். மேலும், கிருஷ்ணகிரியில் மழலையர் பள்ளியின் தாளாளராகவும் உள்ளார். இவரது தந்தை வீரப்பன். தாய் முத்துலட்சுமி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x