ஈரோடு எம்பி கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி? - மருத்துவமனையில் அனுமதி

ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி | கோப்புப்படம்
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி | கோப்புப்படம்
Updated on
1 min read

ஈரோடு: ஈரோடு எம்பி கணேசமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவையில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

ஈரோடு மக்களவைத் தொகுதி எம்பியாக தற்போது பதவி வகித்து வருபவர் அ.கணேசமூர்த்தி (77). கடந்த 2019-ம் ஆண்டு, மக்களவைத் தேர்தலின்போது, திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலில் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு கணேசமூர்த்தி வெற்றி பெற்றார். ஐந்து ஆண்டுகளாக எம்பியாக பதவி வகித்து வந்த கணேசமூர்த்திக்கு, இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

ஈரோடு பெரியார் நகரில் உள்ள தனது வீட்டில் இருந்த கணேசமூர்த்திக்கு இன்று காலை திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து அவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைஒன்றில் அனுமதிக்கப்பட்டார். சுய நினைவு இல்லாமல் இருந்த அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கும் நோக்கில், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்கொலை முயற்சியா? அவரது உடல்நிலை குறித்து தெரிவித்த கட்சி நிர்வாகிகள், "மக்களவைத் தேர்தலில் தனக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் கணேசமூர்த்தி இருந்தார். அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதோடு, கட்சி எடுத்த முடிவு குறித்து அவருக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்படவில்லை. கட்சிக்காக பொடா சிறைவாசம் உள்ளிட்ட தியாகங்களைச் செய்திருந்தும், தனக்கு கட்சித்தலைமை உரிய மரியாதை வழங்கவிலலை என்ற ஆதங்கம் அவருக்கு இருந்தது.

இந்த மன அழுத்தம் காரணமாக, இன்று காலை தனது வீட்டில் விஷ மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். இதனால் மயக்கமடைந்து, சுயநினைவு இல்லாமல் இருந்த கணேசமூர்த்தியை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்" என்று தெரிவித்தனர்.

போலீஸார் விசாரணை: கணேசமூர்த்தி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு திமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் வந்திருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஈரோடு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in