

ஓசூர்: ஓசூரில் கோடைக்காலத்தில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இளநீர், தர்பூசணி, நுங்கு மீது வாக்களிப்பதன் அவசியம் குறித்த ஸ்டிக்கர்களை ஒட்டி நடைபாதை வியாபாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் அனைவரும் 100 சதவீதம் கட்டாயம் வாக்களித்து ஜனநாயக கடமையை செய்ய வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையம் மாவட்டம் தோறும் தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் பேரணிகள், சுவர் விளம்பரங்கள், வீடியோக்கள்,கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு வகையில் விழிப்புணர்வு செய்து வருகின்றது.
அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலும் தேர்தல் ஆணையம் மூலம் பொதுமக்கள் பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டர்கள், தேனீர் கப்புகள் போன்றவற்றின் மீது ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.
தற்போது கோடை சீசன் தொடங்கி உள்ளதால், பொதுமக்கள் வெயிலின் வெப்பத்தை தணிக்க சாலையோரம் விற்பனை செய்யும் நுங்கு, இளநீர், தர்பூசணி அதிகம் வாங்கி பருகுவதால் அவைகள் மீதும் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
நடைபாதை வியாபாரிகள் இந்த ஸ்டிக்கர்களை வாங்கி அனைத்து இளநீர் மற்றும் தர்பூசணியில் ஒட்டி விழிப்புணர்வு செய்து வருகின்றனர். இது குறித்து இளநீர் வியாபாரிகள் கூறும் போது, “தற்போது வெயிலின் தாக்கம் காரணமாக ஏராளமான பொதுமக்கள் இளநீர், நுங்கு, தர்பூசணி பழங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அரசு மருத்துவமனை வழியாக தேர்தல் குறித்து விழிப்புணர்வு நடந்தது. அப்போது தேர்தல் பணியாளர்கள் இளநீர், தர்பூசணி பழங்கள் மீது விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டினர். அதனை நாங்கள் வாங்கி அனைத்து இளநீர் மீதும் ஒட்டி உள்ளோம். இளநீர் வாங்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் இது எங்களால் முடிந்த சிறிய விழிப்புணர்வு முயற்சி” என தெரிவித்தனர்.