Published : 21 Mar 2024 08:01 PM
Last Updated : 21 Mar 2024 08:01 PM

செய்தித் தெறிப்புகள் @ மார்ச் 21: ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு முதல் சிஎஸ்கே புதிய கேப்டன் வரை

ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு: “பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது குறித்து பதிலளிக்க ஆளுநர் ரவிக்கு வெள்ளிக்கிழமை வரை மட்டுமே அவகாசம். இல்லையென்றால், நாங்கள் அதை இப்போது சொல்லப் போவதில்லை” என்று கூறி உச்ச நீதிமன்றம் ஆளுநர் ரவிக்கு கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக ஆளுநர் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்தது.

இதனை அவசர வழக்காக ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, “ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? தமிழக ஆளுநரின் செயல்பாடு குறித்து நாங்கள் தீவிர கவலை கொண்டுள்ளோம். ஆளுநர் ரவி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறியுள்ளார். பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று சொல்வது அவருடைய வேலை அல்ல.

உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த பிறகும் பொன்முடிக்கு பதவியேற்பு நடத்தி வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? நீதிமன்ற உத்தரவை மீறி பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என எப்படி கூறமுடியும்? இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும்.

நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு இருக்கவில்லை. ஆளுநரின் செயல் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. அரசியல் சாசனத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஆளுநர் ரவி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். ஆளுநருக்கு அறிவுரை சொல்பவர்கள் தகுந்த அறிவுரைகளை சொல்வதில்லை. அரசியல் சாசனத்தை ஆளுநர் பின்பற்றவில்லை என்றால் மாநில அரசு என்ன செய்யும். அரசியல் சாசனப்படி ஆளுநர் செயல்படுகிறாரா என்பதை நாங்கள் பொறுத்திருந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது குறித்து பதிலளிக்க ஆளுநர் ரவிக்கு வெள்ளிக்கிழமை வரை அவகாசம். இல்லையென்றால், நாங்கள் அதை இப்போது சொல்லப் போவதில்லை. ஆளுநர் தரப்பில் விளக்கம் கேட்டு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கடுமை காட்டியது.

பாஜக 9 வேட்பாளர்கள் அறிவிப்பு: மக்களவைத் தேர்தலில் பாஜக தமிழகத்தில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: தென் சென்னை - தமிழிசை சவுந்தரராஜன் | மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம் | வேலூர் - ஏ.சி. சண்முகம் | கிருஷ்ணகிரி - சி.நரசிம்மன் | நீலகிரி - எல்.முருகன் |
கோவை - அண்ணாமலை | பெரம்பலூர் - பாரிவேந்தர் | திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன் | கன்னியாகுமரி - பொன்.ராதாகிருஷ்ணன்.

தமிழகத்தில் பாஜக 20 தொகுதிகளில் போட்டி: அண்ணாமலை: “தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான பங்கீட்டை தேசிய ஜனநாயக கூட்டணி முடித்துள்ளது. பாஜகவின் வேட்பாளர்கள் 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளனர். பாஜகவின் சின்னத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மேலும் 4 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்பாளர் பட்டியல் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம்” என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும், “தமாகாவைப் பொறுத்தவரை 3 இடங்களில் போட்டியிடுகின்றனர். ஓபிஎஸ் நிலை குறித்து அவரே விளக்கம் அளிப்பார்” என்றும் அவர் கூறினார்.

அதிமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மக்களவை தேர்தலுக்கான அதிமுகவின் முதல் பட்டியலில் 16 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், 17 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வியாழக்கிழமை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

அதன்படி, ஸ்ரீபெரும்புதூர் - டாக்டர் பிரேம்குமார், வேலூர் - டாக்டர் பசுபதி, தருமபுரி - டாக்டர் அசோகன், திருவண்ணாமலை - கலியபெருமாள், கள்ளக்குறிச்சி - குமரகுரு, திருப்பூர் - அருணாச்சலம், நீலகிரி (தனி) - லோகேஷ் தமிழ்ச்செல்வன், கோவை - சிங்கை ராமச்சந்திரன், பொள்ளாச்சி - கார்த்திகேயன், திருச்சி - கருப்பையா, பெரம்பலூர் - சந்திரமோகன், மயிலாடுதுறை - பாபு, சிவகங்கை - சேவியர்தாஸ், தூத்துக்குடி - சிவசாமி வேலுமணி, நெல்லை - சிம்லா முத்துசோழன், கன்னியாகுமரி - பசிலியன் நசரேத், புதுச்சேரி - தமிழ்வேந்தன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை: தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் 9 ஆண்டுகள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். இவர் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். இந்நிலையில், இலுப்பூரில் உள்ள சி.விஜயபாஸ்கரின் வீட்டில் அமலாக்கத் துறையினர் வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.

இதனிடையே “அதிமுகவுக்கு நெருக்கடி என்ற பேச்சுக்கே இடமில்லை. சட்டரீதியாக அனைத்து வழக்குகளையும் சந்திப்போம். அனைத்து ரெய்டுகளையும் சட்டரீதியாக எதிர்கொள்வோம்” என்று விஜயபாஸ்கர் வீட்டில் நடந்து வரும் ரெய்டு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

ஜி ஸ்கொயர் நிறுவன இடங்களில் ஐ.டி. சோதனை: சென்னையை தலைமையிடமாக கொண்டு ரியல் எஸ்டேட் தொழில் மேற்கொண்டுவரும் ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் வியாழக்கிழமை சோதனை நடந்தினர். நீலாங்கரை, தரமணி, அண்ணா நகர், சேத்துப்பட்டு உட்பட பத்துக்கும் மேற்பட்ட ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்தது. தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள வருமான வரித் துறையின் பறக்கும் படை அதிகாரிகள் ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் சோதனை நடத்தி வருவதாகவும், தேர்தல் நேரம் என்பதால் பணப்பட்டுவாடா குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடந்ததாக தகவல்கள் வெளியாகின.

தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் உறுதி: பிரேமலதா: “அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் ஒன்று உறுதியாகிவிட்டது. அது குறித்த விவரம் வெகுவிரைவில் வெளியிடப்படும்” என்று என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் நிதி முடக்கத்தால் பிரச்சாரம் பாதிப்பு: ராகுல் கொதிப்பு: வங்கிக் கணக்கு முடக்கத்தால் காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ளும் நிதிச் சிக்கலை எடுத்துரைத்து பேசிய ராகுல் காந்தி, கட்சியின் அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக எந்த ஒரு பிரச்சாரத்தையும் மேற்கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். டெல்லியில், சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவுடன் இணைந்து ராகுல் காந்தி வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "இது காங்கிரஸின் மீதான நிகழ்த்தப்பட்ட கிரிமினல் தாக்குதல். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இந்த கிரிமினல் தாக்குதலை எங்கள் மீது நிகழ்த்தியுள்ளனர். இந்தியாவில் இன்று ஜனநாயகம் இல்லை. இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்ற கருத்தியலே பொய்யாக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்ற கருத்தும் பொய்யாக்கப்பட்டுள்ளது. நாட்டில் எங்களுக்கு 20 சதவீத வாக்குகள் உள்ளன, ஆனால், எங்களால் எந்தத் தேர்தல் செலவுக்கும் 2 ரூபாய் கூட கொடுக்க முடியவில்லை. தேர்தலில் எங்களை முடக்கத் திட்டமிட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.

முன்னதாக சோனியா காந்தி கூறும்போது, “தற்போது நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் விஷயம் மிகவும் தீவிரமானது. அது இந்திய தேசிய காங்கிரஸை மட்டும் பாதிப்பதில்லை, நாட்டின் ஜனநாயகத்தையும் பாதிக்கும். காங்கிரஸ் கட்சியை நிதி ரீதியாக முடக்குவதற்கு பிரதமர் மோடியால் திட்டமிடப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்று காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்கம் குறித்து குற்றம்சாட்டினார்.

“கொள்ளையடித்த பணத்தை பிரச்சாரத்துக்கு பயன்படுத்தலாமே” -ஜெ.பி.நட்டா : காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு தொடர்பாக பதிலளித்துள்ள பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, “காங்கிரஸ் கட்சி இத்தனை ஆண்டு காலமாக கொள்ளையடித்த பணத்தை, தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தலாமே” என்று பகடி தொனியில் கருத்து தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்: ஐபிஎல் கோப்பை உடன் அணிகளின் கேப்டன்கள் இருக்கும் புகைப்படத்தை ஐபிஎல் நிர்வாகம் பதிவேற்றியுள்ளது. அதில், சென்னை அணி சார்பில் தோனிக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெற்றிந்தார். தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் என்று குறிப்பிட்டே ருதுராஜ் கெய்க்வாட்டை ஐபிஎல் நிர்வாகம் அடுத்த பதிவை வெளியிட்டது.

இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் பரவியது. இதன் தொடர்ச்சியாக, ஐபிஎல் 2024 சீசன் தொடங்குவதற்கு முன்னதாக எம்எஸ் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாடிடம் ஒப்படைத்துள்ளார். ருதுராஜ் 2019 முதல் சென்னை சூப்பர் கிங்ஸின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறார். மேலும் ஐபிஎல்லில் 52 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாக அதிகாரபூர்வமாக தகவல் வெளியிட்டது.

இதற்கு முன்னர் கடந்த 2022-ல் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகினார். ஜடேஜா அணியை வழிநடத்திய நிலையில் மீண்டும் தோனியே கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில் சென்னை அணியின் அடுத்த கேப்டன் என்ற பேச்சுகளுக்கு மத்தியில் ருதுராஜ் கெய்க்வாட் புதிய கேப்டனாக ஆகியுள்ளார்.

'அப்படியெனில் தோனியின் ரோல் என்ன?' என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவர் அணியில் முக்கிய ஆட்டக்காரராக விளங்குவார் எனத் தெரிகிறது.

உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியது பதஞ்சலி: பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், யோகா குரு பாபா ராம்தேவின் நெருங்கிய உதவியாளருமான ஆச்சார்யா பாலகிருஷ்ணா, தமது நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் அதன் மருத்துவ திறன் குறித்த தவறான விளம்பர கூற்றுக்காக உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியுள்ளார்.

‘அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியப் பகுதியாக அங்கீகரிக்கிறோம்’: அருணாச்சலப் பிரதேசத்தை இந்திய பிராந்தியமாக அங்கீகரித்துள்ள அமெரிக்கா, எல்லைக் கட்டுப்பாடு கோட்டுக்கு அப்பால் நடக்கும் எந்த ஒரு அத்துமீறலையும் எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ தகவல் @ உச்ச நீதிமன்றம்: தேர்தல் பத்திரங்கள் குறித்த முழு விவரங்களும் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

காவல் துறை தகவல் @ ஐகோர்ட்: ஈஷா யோகா மையத்தில் பணியாற்றியவர்களில் இதுவரை 6 பேர் காணாமல் போய் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தெரிவித்துள்ளது.

‘கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் லஞ்சம்’ - ED: பஞ்சாபில் மின் உற்பத்தி நிலையம் அமைக்க, சீனப் பணியாளர்களுக்கான விசாவை மீண்டும் பயன்படுத்துவதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியைப் பெறுவதற்காக காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் நெருங்கிய உதவியாளர் மூலம் ரூ.50 லட்சம் லஞ்சமாகப் பெற்றதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x