Published : 20 Mar 2024 02:11 PM
Last Updated : 20 Mar 2024 02:11 PM
தூத்துக்குடி: மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 11 மணி முதல் தொடங்கியது. வேட்புமனு தாக்கலின்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பார்ப்போம்.
வேட்புமனு படிவம் 2ஏ-ஐ தேர்தல் ஆணைய இணையதளத்தில் ( www.eci.gov.in www.elections.tn.gov.in ) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆட்சியர் அலுவலகத்திலும் பெற்றுக் கொள்ளலாம். முற்பகல் 11 மணிக்கு முன்பும், பிற்பகல் 3 மணிக்கு பின்பும் வேட்பு மனு பெறப் படாது. வேட்பாளரின் வேட்பு மனுவினை முன்மொழிபவர்கள், வேட்பாளர் எந்த தொகுதியில் போட்டியிடுகிறாரோ அந்த தொகுதியைச் சேர்ந்த வாக்காளராக இருக்க வேண்டும்.
வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட கட்சியை சார்ந்தவராக இருந்தால் ஒரு நபரும், அங்கீகரிக்கப்படாத கட்சி வேட்பாளராகவோ அல்லது சுயேச்சை வேட்பாளராகவோ இருந்தால் 10 நபர்களும் முன்மொழிய வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுக்கு 3 வாகனங்கள் மட்டுமே, அதுவும் அலுவலகத்தின் 100 மீட்டர் எல்லைவரை மட்டுமே அனுமதிக்கப்படும். தேர்தல் நடத்தும் அலுவலரின் அறைக்குள் வேட்பாளர் மற்றும் 4 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
ஒரு வேட்பாளர் நான்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்பு மனுவுடன் படிவம் 26-ல் அசையும் மற்றும் அசையா சொத்துகள், நிலுவை கடன்கள் மற்றும் வழக்குகள் தொடர்பான விவரங்களை குறிப்பிட்டு ஆணையரிடம் சான்றொப்பம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். காப்புத் தொகை, மூன்று மாத காலத்துக்குள் வெள்ளை நிற பின்னணியுடன் எடுக்கப்பட்ட ஸ்டாம்ப் அளவு புகைப்படம், அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர் என்றால் படிவம் ஏ மற்றும் பி, தேர்தல் செலவினங்களுக்காக தொடங்கப்பட்ட வங்கி கணக்கு விவரம் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
வேட்பு மனுவை தாக்கல் செய்யும் நாளுக்கு குறைந்தது ஒரு நாளுக்கு முன்னதாக தேர்தல் செலவினங்களுக்காக வேட்பாளர் வங்கி கணக்கு தொடங்க வேண்டும். அனைத்து தேர்தல் செலவினங்களும் இந்த வங்கிக் கணக்கிலிருந்து மட்டுமே செய்யப்பட வேண்டும். ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.95 லட்சம் வரை தேர்தலுக்காக செலவு செய்யலாம்.
மக்களவை தொகுதிக்கு பொது வகுப்பினைச் சேர்ந்த வேட்பாளர்கள் காப்புத்தொகையாக ரூ.25 ஆயிரம், பட்டியலின வகுப்பினர் அல்லது பட்டியலின பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த வேட்பாளர் எனில் காப்பு தொகையாக ரூ.12,500 செலுத்த வேண்டும். காப்பு வைப்புத் தொகையை பணமாகவோ அல்லது அரசாங்க கருவூலத்தில் செலுத்து சீட்டு தாக்கல் செய்வதன் மூலமாகவோ தேர்தல் அதிகாரியிடம் அளிக்கலாம். காப்புத் தொகையினை காசோலை / வங்கி வரை வோலை மூலம் செலுத்த முடியாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT