

சென்னை: தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் சென்னையில் இருந்து பாரிஸ் நகருக்கு செல்லும் விமானம் 5 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் இருந்து வழக்கமாக மாலையில் புறப்படும் ஏர் பிரான்ஸ் பயணிகள் விமானம் நள்ளிரவு 12.05 மணிக்கு சென்னைக்கு வந்துவிட்டு மீண்டும், அதே விமானம் அதிகாலை 2.05 மணிக்கு சென்னையில் இருந்து பாரிஸ் நகருக்கு புறப்பட்டு செல்லும்.
அதேபோல், நேற்று முன்தினம் 317 பயணிகளுடன் பாரிஸ் நகரில் இருந்து புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், மீண்டும் பாரிஸ் நகருக்கே சென்று தரையிறங்கியது.
தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்ட பிறகு தாமதமாக புறப்பட்ட விமானம் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு வந்தது. நேற்று அதிகாலை 2.05 மணிக்கு சென்னையில் இருந்து பாரிஸ் நகருக்கு புறப்பட வேண்டிய விமானம் 5 மணி நேரம் தாமதமாக காலை 7.15 மணிக்கு 326 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.