“தீவிர மக்கள் பணியாற்றவே விருப்பத்துடன் ராஜினாமா செய்தேன்” - தமிழிசை விளக்கம்

சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன்
Updated on
1 min read

சென்னை: "தீவிரமான மக்கள் பணியாற்றுவதற்காக எனது விருப்பத்தின் பேரில் நான் ராஜினாமா செய்திருக்கிறேன். தெலங்கானா மக்கள் என்மீது காட்டிய அன்புக்கும், புதுச்சேரி மக்கள் என்மீது காட்டிய அபரிமிதமான அன்புக்கும் நான் நன்றி உடையவளாக இருப்பேன்" என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "தீவிரமான மக்கள் பணிக்காகத் திரும்ப வேண்டும் என்பதற்காகத்தான், நான் மனமுவந்து ராஜினாமா செய்திருக்கிறேன். தெலங்கானா மக்கள் என்மீது காட்டிய அன்புக்கும், புதுச்சேரி மக்கள் என்மீது காட்டிய அபரிமிதமான அன்புக்கும் நான் நன்றி உடையவளாக இருப்பேன்.

எனக்கு ஆளுநராக வாய்ப்பு அளித்த குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேநேரத்தில், எனது உள்ளக்கிடக்கு நான் மக்களிடம் நேரடியாக பணியாற்றுவது. மக்கள் ஆளுநராகத்தான் நான் இரண்டு மாநிலங்களிலும் இருந்தேன். எனவே, தீவிரமான மக்கள் பணியாற்றுவதற்காக எனது விருப்பத்தின் பேரில் நான் ராஜினாமா செய்திருக்கிறேன்” என்றார்.

வரும் மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியில் போட்டியிடுவீர்களா எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "முதலில் என்னுடைய ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதன்பின்னர், எனது வருங்காலத் திட்டத்தை நான் நேரடியாகவே உங்களுக்குத் தெரவிப்பேன். நான் இப்போது மக்கள் பணிக்காக எனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன் என்பது உண்மை" என்றார்.

இந்த ராஜினாமா முடிவு குறித்து பிரதமர், உள்துறை அமைச்சரிடம் கூறினீர்களா? அவர்கள் என்ன பதில் அளித்தனர் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, "அவர்களிடம் தெரிவித்த பின்னர்தான், இந்த முடிவை எடுத்தேன். அவர்கள், எனக்கு விருப்பத்துக்கு தடை விதிக்கவில்லை" என்றார்.

ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டால், மக்களவைத் தேர்தலில் நேரடியாக போட்டியிட வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, "ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டால், ஊடகங்களை அழைத்து பதில் கூறுகிறேன்" என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in