டி.எம்.கிருஷ்ணா
டி.எம்.கிருஷ்ணா

மியூசிக் அகாடமி 98-வது ஆண்டு விருதுகள் அறிவிப்பு: டி.எம்.கிருஷ்ணாவுக்கு ‘சங்கீத கலாநிதி’

Published on

சென்னை: சென்னை மியூசிக் அகாடமியின் நிர்வாக குழு கூட்டம், அகாடமி தலைவர் என்.முரளி தலைமையில் நேற்று நடந்தது. இதில், 2024-ம் ஆண்டுக்கான ‘சங்கீத கலாநிதி’, ‘நிருத்திய கலாநிதி’ உள்ளிட்ட விருதுகளை பெறும் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மியூசிக் அகாடமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

இசை உலகில் மிகப் பெரிய கவுரவமாக கருதப்படும் மியூசிக் அகாடமியின் ‘சங்கீத கலாநிதி’ உள்ளிட்ட விருதுகளுக்கு இந்த ஆண்டு பல்வேறு கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சங்கீத கலாநிதி: மியூசிக் அகாடமியின் ‘சங்கீத கலாநிதி’ விருதுக்கு பிரபல கர்னாடக இசை வாய்ப்பாட்டு கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், ‘சங்கீத கலா ஆச்சார்யா’ பாகவதலு சீதாராம சர்மா, செங்கல்பட்டு ரங்கநாதன், ‘சங்கீத கலாநிதி’ செம்மங்குடி சீனிவாசய்யர் ஆகியோரிடம் சங்கீதப் பயிற்சி பெற்றவர். கர்னாடக இசையை அதன் பாரம்பரிய பெருமை குறையாமல், சமூகத்தின் எளிய, சாமானிய மக்களுக்கும் கொண்டு சேர்த்தவர். இசை குறித்து பல்வேறு புத்தகங்களை ஆங்கிலத்தில் எழுதியிருப்பவர்.

சங்கீத கலா ஆச்சார்யா: மிருதங்க வித்வான் பேராசிரியர் பாறசாலா ரவி, கர்னாடக இசை வாய்ப்பாட்டு கலைஞர் கீதா ராஜா ஆகியோர் ‘சங்கீத கலா ஆச்சார்யா’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

டிடிகே விருது: இசை உலகில் ‘திருவையாறு சகோதரர்கள்’ எனப்படும் எஸ்.நரசிம்மன், எஸ்.வெங்கடேசன் ஆகியோர் 40 ஆண்டு காலமாக மெலட்டூர் பாகவத மேளாபாரம்பரியத்தில் இசை நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள். இவர்களும், வயலின் வித்வான் ஹெச்.கே.நரசிம்மமூர்த்தியும் ‘டிடிகே' விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.

இசை அறிஞர் விருது: கர்னாடக இசையில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் மார்கரெட் பாஸ்டின் இந்த ஆண்டுக்கான மியூசிக் அகாடமியின் ‘இசை அறிஞர்’ விருதுக்கு தேர்வு செய் யப்பட்டுள்ளார்.

நிருத்திய கலாநிதி விருது: பிரபல மோகினியாட்ட கலைஞராக அறியப்படும் டாக்டர் நீனாபிரசாத், மியூசிக் அகாடமியின் இந்த ஆண்டுக்கான ‘நிருத்தியகலாநிதி’ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

‘சங்கீத கலாநிதி’ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.எம்.கிருஷ்ணா, 2024 டிசம்பர் 15 தொடங்கி 2025 ஜனவரி 1-ம் தேதி வரை நடைபெறும் மியூசிக் அகாடமியின் 98-வது ஆண்டு கருத்தரங்குகளுக்கு தலைமை தாங்குவார். ஜனவரி 1-ம் தேதி நடைபெறும் மியூசிக் அகாடமியின் சதஸ் நிகழ்வில் ‘சங்கீத கலாநிதி’, ‘சங்கீத கலா ஆச்சார்யா’, ‘டிடிகேவிருது’ ‘இசை அறிஞர்’ விருது ஆகியவை, தேர்ந்தெடுக்கப்பட் டுள்ள கலைஞர்களுக்கு வழங்கப்படும்.

2025 ஜனவரி 3-ம் தேதி நடைபெறும் மியூசிக் அகாடமியின்18-வது ஆண்டு நாட்டிய விழாவில் நிருத்ய கலாநிதி விருது வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in