மக்களவை தேர்தல் | 40 தொகுதிகளுக்கும் தேமுதிக விருப்ப மனு விநியோகம்

மக்களவை தேர்தல் | 40 தொகுதிகளுக்கும் தேமுதிக விருப்ப மனு விநியோகம்
Updated on
1 min read

சென்னை: மக்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை மறுநாள் முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விடுத்துள்ள அறிவிப்பில், "பதினெட்டாவது மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் மக்களவை தேர்தல் விருப்ப மனுக்களை வரும் செவ்வாய்க் கிழமை (மார்ச் 19) அன்று காலை 11.00 மணியில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை புதன்கிழமை (மார்ச் 20) மாலை 5 மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

மக்களவை தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள். மேலும், மக்களவை பொது தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 15 ஆயிரமும், தனித் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 10 ஆயிரமும் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்.

மக்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மார்ச் 21 வியாழக்கிழமை அன்று காலை 10 மணியளவில் தலைமை கழகத்தில் நேர்காணல் நடைபெறும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலுக்காக அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது தேமுதிக. நான்கு மக்களவை தொகுதிகளுடன் ஒரு மாநிலங்களவை தொகுதியும் தேமுதிக கேட்டு வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தை மூன்று கட்டங்களாக நீடித்து வரும் நிலையில் 40 தொகுதிகளுக்கும் தேமுதிக விருப்ப மனு பெறவுள்ளதாக அறிவித்துள்ளது கவனிக்கத்தக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in