

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த தமிழக முதல்வர் நேற்று உத்தரவிட்டார். இதை வரவேற்று நேற்று பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.
1912-ல் 3-ம் நிலை நகராட்சியாக தொடங்கப்பட்ட புதுக்கோட்டை, 1988-ல் தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு, சிறப்பு நிலை நகராட்சியானது.
21.95 சதுர கி.மீட்டர் பரப்பளவு, 42 வார்டுகள் கொண்ட புதுக்கோட்டை நகராட்சியில் 37,301 குடியிருப்புகளில் 1.68 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். 2022-23 நிதியாண்டின் மொத்த வருவாய் ரூ.61.38 கோடியாகும்.
மேலும், 37 வார்டுகளில் புதை சாக்கடைத் திட்டம், 180 கி.மீ தொலைவுக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. 114 பூங்காக்களில் 22 பூங்காக்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஏ கிரேடு தரத்துடன் கூடிய பேருந்து நிலையத்தை அதே இடத்தில் ரூ.19 கோடிக்கு புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, புதுக்கோட்டை அருகேயுள்ள வாகவாசல், முள்ளூர், திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம், கவிநாடு கிழக்கு, கவிநாடு மேற்கு, 9 ஏ நத்தம் பண்ணை, 9 பி நத்தம் பண்ணை ஆகிய 8 ஊராட்சிகளை முழுமையாகவும், தேக்காட்டூர் ஊராட்சியில் 1, 2, 3 ஆகிய வார்டுகளையும், திருவேங்கைவாசலில் 3, 4 ஆகிய வார்டுகளையும், வெள்ளனூரில் 7, 8, 9 ஆகிய வார்டுகளை மட்டும் இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நகராட்சியில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார். இதை வரவேற்று புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் எம்எல்ஏ வை.முத்துராஜா, நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில் ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் திரண்டு பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.