

குமுளி: தமிழக கேரள எல்லையில் இருமாநில அதிகாரிகள் சார்பில் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்டத்தின் தமிழக-கேரள எல்லையில் குமுளி, தேக்கடி, மூணாறு உள்ளிட்ட பகுதிகள் அமைந்துள்ளன. இங்கு ஏராளமான தமிழர்கள் வசித்து வருகின்றனர். இதில் சிலர் இரு மாநில வாக்காளர் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர். இரட்டை வாக்குகள் பதிவாவதைத் தடுக்க தேனி, இடுக்கி மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் தேர்தல் நேரங்களில் ஆலோசனைக் கூட்டம் நடை பெறுவது வழக்கம். தற்போது மக்களவைத் தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து, இதற்கான ஆலோசனைக் கூட்டம் தேக்கடியில் நடைபெற்றது.
தேனி, இடுக்கி மாவட்ட ஆட்சியர்கள் ஆர்.வி.ஷஜீவனா, ஷீபாஜார்ஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். இரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் சிவபிரசாத், விஷ்ணு பிரதீப் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். இரட்டை வாக்குப் பதிவை தடுப்பதுடன், மது, பணப் பரிமாற்றம் போன்ற விதி மீறல்களை தடுக்க ஒருங்கிணைந்து செயல்படுவது என முடிவு செய்யப்பட்டது. தேர்தல் நேரங்களில் இரு மாநில எல்லைப்பகுதிகளிலும் காவல் மற்றும் கலால்துறை சார்பில் கூட்டு சோதனைகளை தீவிரப்படுத்துவது,
சோதனைச் சாவடி மற்றும் எல்லைப் பகுதிகளில் 360 டிகிரி சுழலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும் எல்லையில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் தகவல்களை இரு மாவட்டங்களும் பரிமாறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இரு மாநில வருவாய், வனம், கலால் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.