Published : 11 Mar 2024 11:13 AM
Last Updated : 11 Mar 2024 11:13 AM

“எந்த கட்சியும் நிரந்தரமாக இப்படித்தான் இருக்கும் என சொல்ல முடியாது” - விசிக எம்.பி. ரவிக்குமார் நேர்காணல்

திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை விசிக முடித்துள்ளது. அக்கட்சி 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில், தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார் எம்.பி., 'இந்து தமிழ் திசை'க்கு அளித்த பிரத்யேக நேர்காணல்:

5 மாநிலங்களில் விசிக போட்டியிடுகிறது. களப்பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளன? - மக்களவைத் தேர்தலில் தெலங்கானா, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் களம் காண்கிறோம். ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறவுள்ளதால், 50 தொகுதிகளில் போட்டியிடும் வகையில் காங்கிரஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இல்லாவிட்டால் தனியாக களம் காண்போம். இதேபோல் திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக ஒரு தொகுதியில் அதிக பூத் கமிட்டியை அமைக்கும் வலுப்பெற்ற கட்சியாக விசிக இருக்கிறது. ஒரு மக்களவைத் தொகுதிக்கு 1,500 எண்ணிக்கையில் பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் போட்டியிடும் தொகுதியில் சற்று கூடுதலாக அமைத்து பணியாற்றி வருகிறோம்.

கணிசமான மக்கள் பிரதிநிதிகளை வைத்திருந்த போதும், தொகுதி பங்கீட்டில் ஏன் இழுபறி? - இழுபறி இல்லை. பிற கட்சிகளில் கூட்டணியே உறுதியாகவில்லை. விருப்பத்தை தெரிவித்தோம், சூழலுக்கு ஏற்ப தொகுதிகளை பகிர்ந்து கொண்டோம்.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ரவிக்குமாருக்கு ஏன் விருப்பம்? - இது ஒரு தவறான தகவல். அந்த மாதிரிஒரு சம்பவம் நடை பெறவில்லை. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு திமுகவும் கூறவில்லை.

இத்தனை தொகுதிகள் வேண்டும் என அழுத்தமாக கூற முடியாததற்கு விசிகவின் வாக்கு சதவீதத்தை வெளிக்காட்டாததே காரணமா? - தேர்தல் அரசியலில் வாக்கு சதவீதத்தை முதன்மை காரணியாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. குறிப்பிட்ட தொகுதியில் யார் என தெரியாத ஒருவர் போட்டியிட்டால் கூட அவருக்கென சில வாக்குகள் கிடைக்கத்தான் செய்யும். இதை வைத்து அளவிட முடியாது. கணிசமான வாக்கு சதவீதம் பெறும் கட்சிகளால் 1 தொகுதியில் கூட வெற்றி பெற முடிவதில்லை. அப்படியிருக்க கிடைக்கும் வாக்குகளால் என்ன பயன்?

விசிக ஏன் தனித்து களம் காண முயற்சிக்கவில்லை? - தனித்து களம் காண தைரியமோ, அரசியல் முதிர்ச்சியோ, தொலைநோக்கோதேவையில்லை. தங்களுக்கென ஒரு மதிப்பை உருவாக்கி கூட்டணியில் ஒருவர் உங்களை சேர்த்துக் கொள்ள வைப்பதே தேர்தல் அரசியலில் சவாலான விஷயம்.

ஆனால் விசிக இடம்பெறும் கூட்டணி வெற்றி பெறும் என்பதை நிரூபித்துள்ளோம். வாக்கு பரிமாற்றம் என்பது விசிகவுக்கு அதிகமாக இருப்பதாலேயே எங்களைத் தேர்வு செய்கின்றனர். வடமாவட்டங்களில் 15 சதவீத வாக்குகளை விசிகவால் பெற முடியும்.

மதவாதத்தை சமரசமில்லாமல் திமுக எதிர்க்கும் என விசிக நம்புகிறதா? - மதவாத எதிர்ப்பு என்பது திமுகவுக்கான பொறுப்பு மட்டுமல்ல. கூட்டணியில் இருந்தபோது பாஜகவின் மோசமான சட்டங்களை நிறைவேற்ற அதிமுக துணை நின்றது. ஆனால் பாஜகவுடன் கூட்டணிக்கு செல்லும் பிஜு ஜனதா தளம் போன்றவை கூட சிஏஏ, வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

ஒரு தேர்தலை வைத்து அதிமுகவின் செயல்பாட்டை அளவிட முடியாது. அதேநேரம், பாஜகவுக்குஎதிராகவும், தமிழக நலன் சார்ந்த கொள்கைகளை முன்வைத்தும் திமுக இயங்கிவருகிறது. அவர்களின் தொடர் நடவடிக்கைகளை வைத்தே சொல்ல முடியுமே தவிர, நம்பிக்கை சார்ந்த விஷயம் கிடையாது. யாரும் நிரந்தரமாக இப்படித்தான் இருப்பார்கள் என யாரால் சொல்ல முடியும்? என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x