தென்தமிழகத்தில் 4 தொகுதிகளில் காங்கிரஸ் மீண்டும் களமிறங்குமா? - ஓர் அலசல்

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

மதுரை: மக்களவைத் தேர்தலில் தென்தமிழகத்தில் 4 தொகுதிகளில் மீண்டும் காங்கிரஸ் களமிறங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மக்களவை தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழ்நாட்டிலுள்ள 39 தொகுதிகளில் களமிறங்கும் திமுக, அதிமுக, பாஜக தலைமையிலான கூட்டணிகளில் திமுக தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடித்துள்ளது.

அதிமுகவை பொறுத்தவரை தேமுதிக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாஜகவும் சமத்துவ மக்கள் கட்சி தவிர, பிற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்தி வருகிறது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் சூழலில் கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு வேகமெடுக்கும் என தெரிகிறது.

இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாகவே திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு, அடுத்த கட்டமாக எந்தந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது பற்றி தொடர்ந்து கட்சிகளுடன் பேசுகின்றனர். கடந்த முறையைப் போன்று இம்முறையும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில் தென்தமிழகத்தில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, சிவகங்கை மற்றும் திருச்சியில் காங்கிரஸ் போட்டியிட விருப்பம் தெரிவித்து, கூட்டணி கட்சிகளுடன் பேசி வருகிறது. கடந்த முறை போட்டியிட்ட வசந்தகுமார் (கன்னியாகுமரி), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), ஆரூண் (தேனி), கார்த்தி ப.சிதம்பரம் (சிவகங்கை), திருநாவுக்கரசு (திருச்சி) ஆகியோர் 'சீட் ' பெற தொடர்ந்து முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், திமுக தரப்பிலும் இந்த 4 தொகுதிகளிலும் போட்டியிட முயற்சிக்கின்றனர்.

காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூறுகையில், ''சிவகங்கை, கன்னியாகுமரி தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. ஏற்கெனவே, விருதுநகரில் இரு முறை எம்பியாக இருந்ததால், அத்தொகுதியை விட்டுக்கொடுக்க மனமின்றி மீண்டும் கேட்போம். பேச்சுவார்த்தையில் யாருக்கு என்பதை கூட்டணிக் கட்சி தலைவர்கள் இறுதி செய்வர். இருப்பினும், கடந்தமுறை தென் தமிழகத்தில் போட்டியிட்ட 4 தொகுதிகளில் 3 இடங்களில் (கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை) வெற்றி பெற்றோம். இந்த முறையும் 4 தொகுதி மற்றும் மத்திய மாவட்டத்தில் திருச்சியில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும். மேலும், அதிமுகவின் உட்கட்சி குளறுபடியால் இம்முறை தேனியிலும் காங்கிரஸ் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. இது குறித்து கட்சி தலைமையிடம் வலியுறுத்துவோம்'' என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in