ஜாபர் சாதிக் விஷயத்தில் காவல்துறை பலிகடா: இந்து முன்னணி குற்றச்சாட்டு

ஜாபர் சாதிக் விஷயத்தில் காவல்துறை பலிகடா: இந்து முன்னணி குற்றச்சாட்டு
Updated on
1 min read

சென்னை: ஜாபர் சாதிக் விஷயத்தில் திமுக தன்னை காப்பாற்றிக் கொள்ள காவல்துறையை பலிகடா ஆக்கியுள்ளது என இந்து முன்னணி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள திமுகவின் முன்னாள் பொறுப்பாளர் ஜாபர் சாதிக் விஷயத்தில் தமிழக அரசு நிலை தடுமாறியுள்ளது.

இந்த விவகாரத்தில் டிஜிபி சங்கர் ஜிவால் அளித்துள்ள பேட்டி துரதிருஷ்டவசமானது. இது காவல் துறையின் கண்ணியத்தை குலைக்கும் செயலாகும். திமுக தன்னை காப்பாற்றிக் கொள்ள, காவல் துறையை பலிகடா ஆக்கி உள்ளது.

டிஜிபியின் பேட்டி திமுகவின் கருத்தாகவே உள்ளது. அவரது பேட்டியில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் போதைப் பொருள் பிரச்சினை தலைவிரித்தாடும் நிலையில், தக்க நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததை இவரது பேட்டி ஊர்ஜிதப்படுத்துகிறது. தெருவில் கஞ்சா விற்கும் சில நூறு பேரைக் கைது செய்துவிட்டு, கடுமையாக நடவடிக்கை எடுத்ததாக காவல்துறை கூறுவது, மக்களின் கோபத்தை திசை் திருப்பத்தானா?

`ஹேப்பி ஸ்ட்ரீட்’ - சென்னை உட்பட பல நகரங்களில், பல மாதங்களாக `ஹேப்பி ஸ்ட்ரீட்' என்ற பெயரில் ஞாயிறுதோறும் தெருவில் கூத்தடிக்கும் கும்பல் பெருகி வருகிறது. அதேபோல, ரேவ் பார்ட்டியும் பெருகி வருகின்றன. இவர்களின் பின்புலத்தில் போதை இருக்கலாம். எனவே, காவல் துறை போதையில்லா தமிழகத்தை உருவாக்க கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in