போதைப் பொருட்கள் நடமாட்டத்தில் புதுச்சேரி கட்சியுடன் ஜாபர் சாதிக் கூட்டாளிகளுக்கு தொடர்பு: ஆளுநர் தமிழிசை குற்றச்சாட்டு

ஆளுநர் தமிழிசை
ஆளுநர் தமிழிசை
Updated on
1 min read

புதுச்சேரி: போதைப் பொருள் நடமாட்டத்தில், தமிழகத்தின் ஜாபர்சாதிக் கூட்டாளிகள் புதுச்சேரியில் அரசியல் கட்சியுடன் தொடர்பு உடையவர்களாக இருக்கின்றனர். ஆனால், அந்தக் கட்சியே போதைபொருள் நடமாட்டம் இருப்பதாக குற்றம் சாட்டுகிறது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறினார்.

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, புதுச்சேரி ராஜ்நிவாஸில் காவல் துறை உயர்அதிகாரிகள் பங்கேற்ற அவசர ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர்ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சிறுமியின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் மிகத்தீவிரமாக இருக்கிறோம். இதற்காகசிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய நிகழ்வுகள் இனி நடக்காமல் இருக்க, இதுபோன்ற புகார் வந்தால் தீவிரநடவடிக்கை எடுக்குமாறும், போதைப் பொருள் நடமாட்டத்தைதடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், விரைவு நீதிமன்றம் அமைப்பது தொடர்பாக சட்ட ஆலோசனை நடந்து வருகிறது. குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்போம்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட போலீஸார் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளேன்.

முத்தியால்பேட்டை பகுதியில் சமூக விரோத செயல்பாடுகள் அதிகஅளவில் உள்ளதாகத் தெரிவித்தனர். இரண்டு பேர் கைதாகியுள்ளனர். மேலும் பலருக்கு தொடர்பு உள்ளதா என்று விசாரித்து வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் புதுச்சேரி பெண்களில் ஒருவராக நிற்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்கவும், பெண் குழந்தைகள் சுதந்திரமாக நடமாடவும் ஏற்ற சூழலை உருவாக்குவோம்.

போதைப் பொருள் நடமாட்டத்தில், தமிழகத்தின் ஜாபர் சாதிக் கூட்டாளிகள், புதுச்சேரியில் அரசியல் கட்சியுடன் தொடர்பு உடையவர்களாக இருக்கிறார்கள். அந்தக் கட்சியே போதைப் பொருள் நடமாட்டம் இருப்பதாகவும் குற்றம்சாட்டுகிறது. அவர்களுக்கு ஆதரவும் தருகிறது. அவர்களைக் கண்டறிந்து, இரும்புக் கரம் கொண்டுஅடக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்.

தற்போது குற்றம் சாட்டுவோர், இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்கள்தான். தமிழகத்தின் ஆட்சியில் இருப்போர்தான்.

தமிழகத்தில் நடைபெறும் சிலபிரச்சினைகளுக்கு இங்கு தொடர்பு உள்ளது. தமிழக போதைப் பொருள்ஆசாமிகளுடன் தொடர்புடையவர்கள் இங்கு உள்ளனர்.

எதிர்ப்பு இருக்கும் என்று எதிர்பார்த்துதான், கொலை செய்யப்பட்ட சிறுமியின் இல்லத்துக்குச் சென்றேன். போராட்டக்காரர்கள் உணர்வை மதிக்கிறேன். நான் சிறுமியின் தாய்க்கு ஆறுதல் தெரிவித்தேன். நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பெற்றதாக அவர்கள் தெரிவித்தனர். இதற்குப் பிறகும் மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில், சுயலாபத்துக்காக வேலைநிறுத்தம் செய்யக் கூடாது. இவ்வாறு ஆளுநர் கூறினார்.

பொதுவேலைநிறுத்தம்.... இந்நிலையில், சிறுமி படுகொலையை கண்டித்து திமுக, காங்கிரஸ் கூட்டணி சார்பிலும், அதிமுக சார்பிலும் இன்று (மார்ச் 8) பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in