புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு முதல் காஷ்மீரில் மோடி வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ மார்ச் 7, 2024

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு முதல் காஷ்மீரில் மோடி வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ மார்ச் 7, 2024
Updated on
3 min read

புதுச்சேரி சிறுமியின் உடல் நல்லடக்கம்: புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் உடல், பாப்பம்மாள் மயானத்தில் வியாழக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது. சிறுமியின் உடலுடன் அவரின் புத்தகப்பை பை மற்றும் பொம்மைகள் என அவர் பயன்படுத்திய பொருட்கள் சேர்த்து புதைக்கப்பட்டன. முன்னதாக, புதுச்சேரி மாநில டிஜிபி ஸ்ரீனிவாஸ், சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். ஆயிரக்கணக்கனான பொதுமக்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

இதனிடையே, “தேசிய அளவில் நெஞ்சை உலுக்கிய சம்பவமான புதுச்சேரியில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுமி உடலுக்கு புதுச்சேரி அரசில் இருந்து ஒரு அமைச்சர்கூட நேரில் வந்து அஞ்சலி செலுத்தவில்லை. இவர்களை எப்படி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை” என்று அதிமுக விமர்சித்துள்ளது.

விசாரணையை தொடங்கிய புதுச்சேரி சிறப்புக் குழு: சிறுமி கொலை வழக்கில் முழு விசாரணை நடத்த, ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு அமைத்து புதுச்சேரி அரசு புதன்கிழமை இரவு உத்தரவு வெளியிட்டது. இதையடுத்து இந்தக் குழு, சிறுமி கொலை வழக்கு ஆவணங்களை பெற்று கொண்டு, விசாரணையை வியாழக்கிழமை காலை தொடங்கியது.

இதனிடையே,சிறுமி கொலை வழக்கு தொடர்பாக விசாரணையை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர டிஜிபிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். அதோடு, முதல்வர் ரங்கசாமிக்கு கடிதமும் அனுப்பியுள்ளார்.

திமுக மீது ஆளுநர் தமிழிசை குற்றச்சாட்டு: போதைப்பொருள் விஷயத்தில் தமிழகத்தின் சாதிக் கூட்டாளிகள் புதுச்சேரியில் அரசியல் கட்சியுடன் தொடர்புடையோராக இருக்கிறார்கள். அந்த கட்சியே போதைப்பொருள் இருப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள். அவர்களுக்கு ஆதரவு தருகிறார்கள். அவர்களையும் கண்டறிந்து இரும்பு கரம் கொண்டு அடக்க சொல்லியுள்ளோம் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

இதனிடையே, புதுச்சேரியில் போதைப்பொருளை கட்டுப்படுத்தவும், சிறுமி கொலை சம்பவத்தில் அரசின் அலட்சியத்தைக் கண்டித்தும் இண்டியா கூட்டணி, அதிமுக கட்சிகள் நாளை பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்தப் போராட்டத்தில் பங்கேற்க முதல்வர் ரங்கசாமி ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ நேருவும் அழைப்பு விடுத்துள்ளார்.

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்கீடு செய்ய திமுக பேச்சுவார்த்தைக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் பம்பரம் அல்லது தனிச் சின்னத்தில் போட்டியிட மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக, தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் இயங்கி வரும் ‘இண்டியா கூட்டணி’ தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றிக் கொடி நாட்ட வேண்டும் என்பதில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக இருக்கிறது என வியாழக்கிழமை நடந்த மதிமுக நிர்வாகக் குழு அவசரக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிம்லா முத்துச்சோழன் அதிமுகவில் ஐக்கியம்: திமுக முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகளும், ஆர்.கே.நகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவருமான சிம்லா முத்துச்சோழன் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார்.

எஸ்பிஐ மீது அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு: தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை வெளியிடுவதற்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு நிறைவடைந்த நிலையில், எஸ்பிஐ வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இது குறித்த மனுவை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் அமைப்பு தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2019, ஏப்.12-ம் தேதி முதல் வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை மார்ச் 6-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கும்படி எஸ்பிஐ வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அவ்வங்கி ஜூன் வரை கால அவகாசம் கோரியிருந்தது. அது தொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.

விடுதலையானார் முன்னாள் பேராசிரியர்: மாவோயிஸ்ட்களுடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட டெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா, நாக்பூர் சிறையில் இருந்து வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டார். முன்னதாக, இந்த வழக்கில் இருந்து சாய்பாபாவை மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளை விடுதலை செவ்வாய்க்கிழமை விடுதலை செய்திருந்ததது.

கூட்டணி குறித்து பாஜக - பிஜு ஜனதா தளம் ஆலோசனை: 15 வருடங்களுக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் இணையவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நவீன் பட்நாயக்கின் அதிகாரபூர்வ இல்லமான நவீன் நிவாஸில் நடந்த ஆலோசனை கூட்டம் இந்தக் கூட்டணி பேச்சுக்கள் எழ அச்சாரமிட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீரில் பிரதமர் மோடி!: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த சட்டப் பிரிவு 370, கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக ஜம்மு காஷ்மீருக்கு வியாழக்கிழமை பயணம் மேற்கொண்டார். தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள பக்‌ஷி மைதானத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், ரூ.5,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, "சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீர் புதிய உயரங்களை தொட்டுக் கொண்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மக்கள் இப்போது சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றனர். அதன் காரணமாகவே, வளர்ச்சிக்கான புதிய உச்சங்களை இந்த மாநிலம் தொடுகிறது. சட்டப்பிரிவு 370 விஷயத்தில் காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாக ஜம்மு காஷ்மீர் மக்களையும் நாட்டையும் தவறாக வழிநடத்தியது” என்று கூறினார்.

தரம்சாலா டெஸ்ட்: 218 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் வியாழக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் குல்தீப் யாதவ் மற்றும் அஸ்வினின் சுழல் மேஜிக்கில் சிக்கிய இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.

இந்தப் போட்டி இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ ஆகியோருக்கு 100-வது சர்வதேச டெஸ்ட் போட்டியாகும். இதையடுத்து, ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு 100வது டெஸ்ட் போட்டிக்கான தொப்பி வழங்கப்பட்டது. அஸ்வினின் குடும்பத்தினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in